க.செல்வராஜ்

 
தமிழகம்

திமுகவில் இருந்து திருப்பூர் மாவட்ட செயலாளர் விலகல்: மாற்று கட்சியினருக்கு முக்கியத்துவம் அளிப்பதாக தலைமைக்கு கடிதம்

செய்திப்பிரிவு

திருப்பூர்: முன்னாள் எம்எல்ஏவும், திமுக திருப்பூர் மத்திய மாவட்டச் செயலாளருமான க.செல்வராஜ், அடிப்படை உறுப்பினர் உள்ளி்ட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இகுறித்து திமுக தலைவருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: நான் கடந்த 1976-ம் ஆண்டு தொடங்கி 50 ஆண்டுகளாக கட்சிக்கு விசுவாசமாக இருந்தேன். நகரச் செயலாளர், சேர்மன், மேயர் உள்ளிட்ட பொறுப்புகளை தாங்களும், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியும் அளித்தீர்கள்.

கடந்த 2011-ம் ஆண்டு முதல் மாவட்ட செயலாளராகவும் தற்போது வரையில் செயல்பட்டு வருகிறேன். 2021-ம் ஆண்டு திருப்பூர் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.

இருப்பினும் 2022-ம் ஆண்டு தொடக்கம் முதல் மாற்றுக் கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு அதிகாரம் மிக்க பதவிகள் வழங்கப்பட்டது எனக்குள் மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திருப்பூரில் உள்ள முக்கிய தொழிலதிபர் தங்களிடம் வற்புறுத்தியதன் பெயரில் திருப்பூர் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட மாற்றுக் கட்சியிலிருந்து வந்து திருப்பூர் மேயராக இருந்த தினேஷ்குமாருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

எனக்கு எந்த ஒரு முன் னறிவிப்பும் இன்றி நான் விருப்ப மனுவே அளிக்காத பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதி எனக்கு வழங்கப்பட்டது. இது எனக்கு மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது.

தொழிலதிபர் மற்றும் மாற்றுக் கட்சியில் இருந்து வந்த தினேஷ்குமார் ஆகியோருக்கு கொடுத்த முக்கியத்துவத்தை, என்னை தவிர வேறு யாராவது ஒரு திமுக விசுவாசிக்கு திருப்பூர் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் வாய்ப்பு கொடுத்திருந்தால் கூட நான் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். கடந்த 50 ஆண்டு பொது வாழ்வில் எனக்கு அரசியல் தவிர வேறு எதுவும் தெரியாது.

மக்கள் பணி மட்டுமே எனக்கு முதன்மையாக இருந்தது. தற்போதைய நிகழ்வுகளால் மிகுந்த மன வேதனையோடு திருப்பூர் மத்திய மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நான் விலகுகிறேன். தற்போதைய சூழலில் வேறு எந்தக் கட்சிக்கும் செல்லும் எண்ணம் இல்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT