தமிழகம்

நம்பிக்கை வாக்கெடுப்பில் திருப்பத்தூர் தவெக எம்எல்ஏ பங்கேற்க உயர் நீதிமன்றம் தடை

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: திருப்பத்தூர் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதி, நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சிவகங்கை மாவட்​டம் திருப்​பத்​தூர் தொகுதி திமுக வேட்பாள​ரான முன்​னாள் அமைச்​சர் கே.ஆர்​.பெரியகருப்பன் ஒரு ஓட்டு வித்​தி​யாசத்​தில் தவெக வேட்பாளர் சீனி​வாச சேதுப​தியிடம் தோல்​வியடைந்​தார் அதையடுத்து மறு​வாக்கு எண்ணிக்கை முறை​யாக நடை​பெற​வில்லை என அவர் வழக்கு தொடர்ந்​தார்.

அதில், “எனது தொகு​திக்கு பதி​வான ஒரு தபால் வாக்கை அதி​காரி​கள் தவறு​தலாக வேலூர் அரு​கே​யுள்ள திருப்பத்தூர் தொகு​திக்கு மாற்றி அனுப்பி விட்​டனர். எனவே அந்த தபால் வாக்கை மீட்டு மறு எண்​ணிக்கை நடத்த தேர்​தல் ஆணை​யத்​துக்கு உத்​தர​விட வேண்​டும். அது​வரை சீனி​வாச சேதுபதி சட்​டப்​பேர​வை​யில் நடைபெறும் நம்​பிக்கை வாக்​கெடுப்​பில் பங்​கேற்க தடை விதிக்க வேண்​டும்” என கோரி​யிருந்தார்.

இந்த வழக்கை ஞாயிறன்று விசா​ரித்த நீதிப​தி​கள் எல்​.விக்​டோரியா கவுரி, என்​.செந்​தில்​கு​மார் அமர்வு, இதுதொடர்பாக தேர்​தல் ஆணை​யம் விளக்​கமளிக்க உத்​தர​விட்​டிருந்​தனர்.

அதன்​படி இந்த வழக்​கில் தமிழக தலைமை தேர்​தல் அதிகாரி அர்ச்​சனா பட்​நாயக் நேற்று தாக்​கல் செய்​த பதில்​மனு​வில், “தேர்​தல் முடிவுக்கு எதி​ராக உயர் நீதி​மன்​றத்​தில் தேர்​தல் வழக்​கு​தான் தொடர முடி​யும். அந்த தேர்​தல் வழக்கை விசா​ரிக்கும் உயர் நீதி​மன்​றம்​தான் அத்​தொகுதியின் தேர்​தல் வெற்றி செல்​லுமா, செல்​லாதா என்​பதை தீர்​மானிக்​கும். அதைத் தவிர்த்து ரிட் வழக்கு தொடர்ந்து இதற்கு பரி​காரம் தேட முடி​யாது. இதை மக்​கள் பிர​தி​நி​தித்​துவச் சட்​ட​மும், உச்ச நீதி​மன்ற தீர்ப்​பு​களும் உறுதி செய்​துள்ளன.

சிவகங்கை மாவட்​டம் திருப்​பத்​தூர் தொகு​திக்கு பதி​வான தபால் வாக்கு தொகுதி மாற்றி அனுப்பி வைக்​கப்​பட்டுள்ளதாகக் கூறப்​படும் குற்​றச்​சாட்​டுக்கு எந்த ஆதா​ர​மும் இல்​லை. மேலும் தேர்​தல் முடிவு அறிவிக்​கப்​பட்ட பிறகு ஒரு தொகு​தி​யில் எண்​ணப்​பட்ட தபால் வாக்கை வேறு தொகு​திக்கு அனுப்பி வைக்​க​வும் முடி​யாது. அதே​போல தேர்​தல் முடிவு அறிவிக்​கப்​பட்ட பிறகு வேறு தொகுதிக்கு அனுப்​பப்​பட்ட தபால் வாக்கை மீட்​டு, மறு எண்​ணிக்கை நடத்​தக் கோரும் மனு மீது முடி​வெடுக்க சம்​பந்​தப்​பட்ட தேர்​தல் அதி​காரிக்​கும் அதி​காரம் இல்​லை.

ஒரே பெயர் கொண்ட தொகு​தி​களுக்​கான வாக்​கு​களை கையாளும்​போது தேர்​தல் அதி​காரி​கள் மிகுந்த எச்சரிக்கை உணர்​வுடன் செயல்பட ஏற்​கெனவே அறிவுறுத்​தப்​பட்​டுள்​ளது. அதன் காரண​மாகவே தபால் வாக்​கு​களில் தொகுதி எண் குறிப்​பிடப்பட்டு சம்​பந்​தப்​பட்ட தொகு​தி​களுக்கு அனுப்பி வைக்​கப்​படு​கின்​றன. தபால் வாக்கு வேறு தொகு​திக்கு அனுப்பி வைக்​கப்​பட்​ட​தாக கற்​பனை​யாக கூறப்​படும் குற்​றச்​சாட்டு அடிப்​படை ஆதா​ரமற்​றது. எனவே இந்த வழக்கை அபராதத்​துடன் தள்ளு​படி செய்ய வேண்​டும்” என கோரி இருந்தார்.

தேர்தல் ஆணையம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலனும், பெரியகருப்பன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவும் ஆஜராகி வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்​பை தேதி குறிப்​பி​டா​மல்​ தள்​ளி​வைத்​தனர்.

இந்நிலையில், நம்பிக்க வாக்கெடுப்பு உள்ளிட்ட சட்டபேரவை நிகழ்ச்சிகளில் பங்கேற்க தவெக எம்.எல்.ஏ. சீனிவாச சேதுபதிக்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். தபால் வாக்குகள், மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகள், சிசிடிவி கேமரா பதிவுகள் ஆகியவற்றை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ள நீதிபதிகள், வழக்கு குறித்து தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT