அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் திமுக, அதிமுக, தவெக ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. பிரதான கட்சிகளுக்கு எதிரான அதிருப்தி வாக்குகளைப் பெற தவெக தீவிரமாகக் களப்பணியாற்றி வருகிறது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தொகுதியில் பார்வர்ட் பிளாக் கட்சி ஒருமுறையும், 6 முறை அதிமுகவும், 5 முறை திமுகவும் வெற்றி பெற்றுள்ளன. திமுக சார்பில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மீண்டும் களமிறங்கியுள்ளார்.
அண்மையில் துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளையொட்டி அனைத்துக் கிராமங்களுக்கும் சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கி மக்களிடமும் வரவேற்பைப் பெற்றார். ஏற்கெனவே 9 முறை எம்எல்ஏவாக இருந்தவர், தற்போது 10-வது முறையாக களத்தில் இறங்கியுள்ளார்.
தொகுதி மக்களிடம் நன்கு அறிமுகமானவர் என்பதோடு, அனைவரிடமும் உறவுமுறை சொல்லி பழகக் கூடியவர். தொகுதியில் உள்ள அடிப்படை பிரச்சினைகள், மக்களின் தேவைகள் குறித்து நன்கு அறிந்தவர் என்பதும் இதுவரை இல்லாத வகையில் ஆயிரக்கணக்கானோருக்கு இலவச பட்டா வழங்கியதும் இவருக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.
அதிமுக சார்பில் சேதுபதி போட்டியிடுகிறார். அதிமுக நகரச் செயலாளராகப் பொறுப்பு வகிக்கும் இவர் களத்தில் விறுவிறுப்பாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். இந்த முறை முன்னாள் ஊராட்சி ஒன்றியத் தலைவர் யோகவசுதேவனுக்கு வாய்ப்புக் கிடைக்கும் என்ற பேச்சு அடிபட்டது.
அவர், அருப்புக் கோட்டை நகரப் பகுதி மற்றும் ஊரகப் பகுதியில் மக்கள் நலத் திட்ட உதவிகள் வழங்குவதில் கூடுதல் கவனம் செலுத்தி வந்தார். ஆனால், அருப்புக்கோட்டையில் அதிமுகவினர் யாரும் எதிர்பார்க்காத வகையில் சேதுபதிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் அதிமுகவில் ஒரு தரப்பினர் ஏமாற்றம் அடைந்தனர்.
ஆனாலும், கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைத்து சேதுபதி தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். அமைச்சரை எதிர்த்துப் போட்டி என்பதால் வாக்குகளை அதிகம் வாங்குவதற்காக தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இவர்களோடு நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மணிமாறன், தவெக வேட்பாளர் கார்த்திக்குமார் ஆகியோரும் களமிறங்கியுள்ளனர். குறிப்பாக இளம் வாக்காளர்களைக் கவரும் வகையிலும், பெண்கள் வாக்குகளைப் பெறும் வகையிலும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரதான கட்சிகளுக்கு எதிரான அதிருப்தி வாக்குகளை தாங்கள் பெறும் வகையில் தவெகவினர் திட்டமிட்டு களப்பணியாற்றி வருகின்றனர். அருப்புக்கோட்டை தொகுதியில் இந்த முறை திமுக, அதிமுக, தவெக இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.