நாகர்கோவில் கிளைச்சிறையில் உயிரிழந்த விசாரணைக் கைதி சபரிவர்மன்
நாகர்கோவில்: நாகர்கோவில் கிளைச்சிறையில் உயிரிழந்த விசாரணைக் கைதி சபரிவர்மனின் உடலில் 19 இடங்களில் காயம் இருந்ததாக உடற்கூறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிறைக் காவலர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் வடக்கு தாமரைகுளம் அருகே நாராயணன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் 33 வயதான சபரிவர்மன். இவர் அப்பகுதியில் கடை நடத்தி வந்தார். கடந்த 9-ம் தேதி மதியம் 1.30 மணியளவில் இவரது கடையில் தென்தாமரகுளம் போலீஸார் சோதனை நடத்தினர்.
அப்போது அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இவரது கடையில் இருந்ததாகக் கூறி, சபரிவர்மனை கைது செய்து நாகர்கோவில் சிறையில் அடைத்தனர். கடந்த 4 நாட்களாக அவர் விசாரணை கைதி என்ற நிலையில் இருந்துள்ளார்.
சிறை அறையில் நேற்று அதிகாலையில் சபரிவர்மன் மயங்கிய நிலையில் கிடந்ததாகக் கூறப்படுகிறது. போலீஸார் அவரை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்தபோது சபரிவர்மன் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. இத்தகவல் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டதும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சபரிவர்மனை போலீஸார் பலமாக தாக்கி உள்ளதாகவும், அவருக்கு எந்தவித நோய் பாதிப்பும் கிடையாது எனவும் உறவினர்கள் குற்றம்சாட்டினர். மருத்துவமனை வளாகத்தில் திரண்டு அவர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் எஸ்.பி. ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.
நீதிபதி முன்னிலையில் உடற்கூறு ஆய்வு
இந்த சூழலில் மாவட்ட நீதிபதி முன்னிலையில் சிறையில் உயிரிழந்த சபரிவர்மனின் உடற்கூறு ஆய்வு பணிகள் நடைபெற்றது. இந்நிலையில், அதன் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.
அதில் அவரது உடலில் 19 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. கை, கால்கள், நெஞ்சு, தலை, கழுத்தின் பின் பகுதியில் காயமும், வலது கையில் முறிவும் ஏற்பட்டுள்ளது. மேலும், அவரது உடலில் கை, கால்கள் கட்டிப்போட்டு தாக்கியதற்கான அடையாளமும் இருந்தது தெரியவந்துள்ளது.
சிறைக் காவலர்கள் மூவர் கைது
சிறையில் விசாரணை கைது சபரிவர்மன் உயிரிழந்த விவகாரத்தில் சிறைக் காவலர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாகர்கோவில் கிளைச்சிறையின் தலைமை வார்டன் ஜெகன், சிறை வார்டன்கள் சிவகுமார் மற்றும் திருவுடை நம்பி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.