சென்னை: எம்எல்ஏக்களுக்கு அரசு சார்பில் வாகனம், வாகனப்படி, உதவியாளர் படி என மாதம் ரூ.1 லட்சத்தை அனுமதித்து முதல்வர் விஜய் கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்டப்பேரவையில் 110-வது விதியின்கீழ் அறிவித்திருந்தார்.
இதற்கு செயல்வடிவம் தரும் வகையில், தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் சட்டத்தை திருத்தும் மசோதாவை, சட்டப்பேரவையில் அவை முன்னவர் செங்கோட்டையன் நேற்று அறிமுகம் செய்தார்.
அதில், ‘தொகுதியில் பொதுச் சேவையை திறம்படி மேற்கொள்ள, ஒவ்வொரு எம்எல்ஏவுக்கும் வழங்கப்படும் மாதாந்திர வாகனப்படித் தொகை ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.75 ஆயிரம் ஆக உயர்த்தப்படுவதுடன், தனி உதவியாளர் படித்தொகை ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்.
இதற்காக சட்டத் திருத்தம் மேற் கொள்ளப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த மசோதா நேற்று மாலை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
தனி அலுவலர் பதவிக் காலம்
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற 28 மாவட்டங்களில் உள்ள கிராம ஊராட்சிகள், மாவட்ட ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பதவிக் காலம் கடந்த 2025 ஜன.5-ம் தேதி முடிந்தது.
இதையடுத்து, இந்த உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்கதனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களது பதவிக் காலம் கடந்த ஜூலை 6-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தனி அலுவலர்களின் பதவிக் காலத்தை ஜூலை 7 முதல் அக்.19-ம் தேதி வரை நீடித்து அரசு உத்தரவிட்டது. இந்த பதவிக் கால நீட்டிப்புக்கு பேரவையின் ஒப்புதலைப் பெறும் வகையில், ஊராட்சிகள் சட்டத் திருத்த மசோதாவை அமைச்சர் ஆனந்த் நேற்று தாக்கல் செய்தார்.
மதிப்புக் கூட்டு வரிச் சட்டம்
தமிழ்நாடு ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள அதிக அளவு மேல்முறையீடுகள், அதிகப்படியான பணிச்சுமை மற்றும் தற்போதுள்ள வழக்கு தொடரும் நடைமுறை மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் ஓர் உறுப்பினர் தனியாக விசாரித்து முடிவு செய்கிற, ஆட்சேபத்துக்குரிய விற்பனைத் தொகைக்கான விசாரணை வரம்பை, தற்போதுள்ள ரூ.1 லட்சம் என்பதை ரூ.1 கோடியாக உயர்த்த அரசு முடிவெடுத்துள்ளது.
இதையடுத்து, தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரி (‘வாட்’) சட்டத்தில் இதற்கான திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. இத்திருத்தம் தொடர்பான சட்ட மசோதாவை பேரவையில் அமைச்சர் லோகேஷ் தமிழ் செல்வன் நேற்று தாக்கல் செய்தார்.