தமிழகம்

ஆர்.பி.உதயகுமாரின் தேர்தல் பணிகளை தடுக்க ஆளுங்கட்சி முயற்சி: அதிமுக குற்றச்சாட்டு

கி.மகாராஜன்

மதுரை: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் தேர்தல் பணியை தடுக்க, அதிகாரிகள் மூலம் ஆளுங்கட்சியினர் அச்சுறுத்துகின்றனர் என அதிமுக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி மதுரை திருமங்கலம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் அவரின் தேர்தல் பணியை தடுக்கும் வகையில் டி.குண்ணத்தூரிலுள்ள அம்மா கோயில் மற்றும் அங்குள்ள அதிமுக அலுவலகத்தில் தேர்தல் பிரிவு பறக்கும்படை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தொடர்ந்து 5 முறைக்கு மேல் சோதனை நடத்தியுள்ளதாகவும், ஆளுங்கட்சியின் தூண்டுதலின் பேரில் அதிமுகவின் தேர்தல் பணிக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக இச்சோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அதிமுகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

          

இது குறித்து அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் கூறியதாவது: ஒவ்வொரு நாளும் தேர்தல் பணி குறித்து முன்னாள் அமைச்சர் தலைமையில் ஆலோசனை நடக்கும் நேரத்தில் இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், தேர்தல் பணியை தடுக்கும் விதமாகவும் ஆளுங்கட்சியான திமுகவின் நிர்பந்தத்தின் பேரில் அம்மா கோயிலில் தேர்தல் அதிகாரிகள், காவல்துறையினர் சோதனை நடத்துகின்றனர்.

இதுவரை 5 முறை சோதனை நடத்தினாலும், எவ்வித பொருட்களும் அவர்கள் எடுக்க முடியவில்லை.எங்களது தேர்தல் பணியை தடுக்கும் வகையில் ஆளுங்கட்சியினர் அதிகார துஷ்பிரயோகம் செய்து அதிகாரிகளை நிர்பந்தம் செய்கின்றனர். ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களின் இடங்கள், அலுவலகங்களில் இது போன்ற சோதனை நடத்துவதில்லை.

இதுபோன்ற மறைமுக மிரட்டலால் அதிமுகவின் தேர்தல் பணிகளை யாராலும் முடக்க முடியாது. எங்கள் மடியில் கனமில்லை, பயமும் இல்லை.தேர்தல் அதிகாரிகள் நியாயமான முறையில் செயல்பட வேண்டும். ஆளுங்கட்சியின் கைப்பாவையாக அதிகாரிகள் மாறிவிடக்கூடாது. ஏதாவது கிடைத்தால் வழக்கு போடலாம் என அதிகாரிகள் முயற்சிக்கின்றனர், அது ஒருபோதும் நடக்காது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT