வேல்முருகன் | கோப்புப்படம் 
தமிழகம்

‘தென்காசி வன்முறை... தமிழகத்தின் சமூக நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல்’ - வேல்முருகன்

வெற்றி மயிலோன்

சென்னை: ‘தென்காசி நெட்டூர் பகுதியில் பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து, கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியாகும் தகவல்கள், தமிழ்நாட்டின் அமைதிக்கும் சமூக நல்லிணக்கத்துக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளன’ என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டத்திற்குட்பட்ட நெட்டூர் பகுதியில் பட்டியல் சமூக மக்களை அச்சுறுத்தும் வகையில் நிகழ்ந்துள்ள வன்முறைச் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.

மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து, கொடூரமான ஆயுதங்களுடன் அங்கு இருந்தவர்களை குறிவைத்து கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியாகும் தகவல்கள், தமிழ்நாட்டின் அமைதிக்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளன. இத்தகைய வன்முறைச் செயல் கடும் கண்டனத்திற்குரியது.

இச்சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும், சிலருக்கு தீவிர பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுவது மிகுந்த கவலையளிக்கிறது. மக்களின் வாழ்விடங்களிலேயே பாதுகாப்பின்மை நிலவுகின்ற சூழல் உருவாகுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். சமூக ஆதிக்க மனப்பான்மை மற்றும் சாதி வெறி எந்த வடிவிலும் தலைதூக்க அனுமதிக்கக் கூடாது.

தமிழ்நாடு அரசு இவ்விவகாரத்தை சாதாரண குற்றச் சம்பவமாகக் கருதாமல், அதன் முழுமையானப் பின்னணியை ஆராய்ந்து உண்மைக் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இந்த தாக்குதலில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாகக் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு உதவிகள் வழங்கப்பட வேண்டும். மேலும், அப்பகுதியில் கூடுதல் காவல் பாதுகாப்பு ஏற்படுத்தி, அனைத்து சமூக மக்களின் உயிர், உடைமை மற்றும் அடிப்படை உரிமைகளுக்கு முழுமையானப் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டில் எந்த சமூகத்தினருக்கும் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலை ஏற்படக்கூடாது. சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட வேண்டும். சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் சக்திகள் மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதுவே சனநாயகத்தின் மாண்பையும் மனிதநேயத்தின் அடிப்படையையும் காக்கும் வழியாகும்.

எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாகத் தலையிட்டு குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களைக் கைது செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT