புதுச்சேரி: புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீரமைப்பு பணியில் 1,000 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிறப்பு ரோந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (நவ.8) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக கடைவீதிகளில் குவிந்து வருகின்றனர். மேலும், பலர் சொந்த ஊர்களுக்கு செல்வது, வெளியூர்களில் இருந்து புதுச்சேரிக்கு வருவதுமாக இருக்கின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு, புதுச்சேரி டிஜிபி உத்தரவின்பேரில், முக்கிய பகுதிகளில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக நகரில் நேரு வீதி, காந்தி வீதி, அண்ணா சாலை, காமராஜர் வீதி உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், திருட்டு உள்ளிட்ட குற்றச்சம்பவங்களை தடுக்கவும் சிறப்பு போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
1,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இரவு 12 மணி வரை சிறப்பு ரோந்து பணி மற்றும் வாகன சோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ‘ஸ்மார்ட் சிட்டி’ மூலம் போடப்பட்ட சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது.
இது குறித்து புதுச்சேரி சட்டம் - ஒழுங்கு சீனியர் எஸ்பி கலைவாணனிடம் கேட்டபோது, “தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி முழுவதும் சட்டம் - ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, ஐஆர்பிஎன் மற்றும் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக நகரில் கடைவீதிகளில் சிறப்பு போலீஸார் பாதுகாப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒலி பெருக்கி அறிவிப்புகள் மூலம் ஒழுங்குபடுத்தப்படுகிறது. நள்ளிரவு 12 மணி வரை சிறப்பு ரோந்து பணிகள், மொபைல் பேட்ராலிங், இருசக்கர வாகன ரோந்து உள்ளிட்டவையும் மேற்கொள்ளப்படுகிறது” என்று தெரிவித்தார்.
4 நாட்கள் போக்குவரத்து மாற்றம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று ( நவ.6) முதல் வரும் 9-ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் மற்றும் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன. குறிப்பாக புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வரும் வாகனங்கள், கிழக்குக் கடற்கரைச் சாலையில் இருந்து வரும் வாகனங்களுக்கான வழித்தடங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
அண்ணா சதுக்கம் முதல் 45 அடி சாலை சந்திப்பு வரையிலான அண்ணா சாலைப் பகுதியிலும், பட்டாணிக்கடை சந்திப்பு முதல் ஜிஆர்டி சந்திப்பு வரையிலான காமராஜர் சாலைப் பகுதியிலும் வரும் 9-ம் தேதி மாலை 4 மணி வரை அனைத்து வகையான கனரக வானங்களும் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கூடும் கூட்ட நெரிசலைப் பொறுத்து நேரு வீதியில் வாகனங்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்படும். செட்டி வீதி, நீடராஜப்பர் வீதி வரையிலான எஸ்.எஸ்.பிள்ளை வீதி, பாரதி வீதி மற்றும் மகாத்மா காந்தி சாலை பகுதிகளில் 6 முதல் 9-ம் தேதி வரை தினமும் காலை 9.30 மணி முதல் இரவு 11 மணி வரை இருசக்கர வாகனங்களை தவிர மற்ற அனைத்து வகையான வாகனங்களும் செல்ல தடை விதிக்கப்படுகிறது.
இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த நேரு வீதியில் அமைந்துள்ள பழைய சிறைச்சாலை வளாகம் மற்றும் அண்ணா சாலையில் அமைந்துள்ள அண்ணா திடலில் வாகன நிறுத்துமிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
வணிக நிறுவன உரிமையாளர்கள் தங்களது கடைகளக்கு முன்புறம் உள்ள சாலையைப் பதிவு செய்யும் வகையில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்த வேண்டும். மேலும் கடைகளுக்கு முன்புறம் உள்ள நடைபாதைகள் மற்றும் பாதசாரிகள் செல்லும் வழிகள் ஆக்கிரமிப்பைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் வாகன ஓட்டிகள் மற்றும் வணிக நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. சந்தேகத்துக்கிடமான நபர்கள் அல்லது பொருட்கள் ஏதேனும் தென்பட்டால், உடனடியாக அருகிலுள்ள காவல்துறையினரையோ, கட்டுப்பாட்டு அறையின் அவசர உதவி எண் 112 மூலமாகவோ தகவல் தெரிவிக்கலாம் என வடகிழக்கு போக்குவரத்து எஸ்பி தெரிவித்துள்ளார்.