திருச்சி: “அரசியல் புரிதல் இல்லாமல், கவர்ச்சியில் மயங்கி நமக்கு ஓட்டுப் போட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள். உங்களுக்கு ஓட்டுப் போட்டால் நல்லவர்கள், எனக்கு ஓட்டுப் போட்டால் அவர்கள் தற்குறியா? இதே மக்கள்தானே இத்தனை ஆண்டுகளாக உங்களுக்கு ஓட்டுப் போட்டார்கள். நீங்கள் தற்குறி எனச் சொன்னவர்கள்தான் உங்கள் அரசியல் வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்கிவிட்டனர்” என திருச்சியில் முதல்வர் விஜய் பேசினார்.
பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்ட விஜய், 2 தொகுதிகளிலுமே வெற்றி பெற்றார். இதில் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த அவர், இன்று அந்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க திருச்சிக்கு வந்தார்.
முதல்வரான பின்னர் திருச்சிக்கு முதன்முறையாக வரும் முதல்வர் ஜோசப் விஜய்க்கு தவெகவினர் பிரம்மாண்ட வரவேற்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். 1,000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். முதல்வரின் வருகைக்கான மாநகரத்தின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
திருச்சி விமான நிலையத்துக்கு இன்று மதியம் 2.45 மணியளவில் வந்தடைந்த முதல்வர் விஜய்யை, அமைச்சர்கள், தவெக எம்எல்ஏக்கள் மற்றும் மதிமுக எம்.பி துரை வைகோ ஆகியோர் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து திருச்சி விமான நிலையம் முதல் ஜோசப் கல்லூரி மைதானம் வரை வேனில் அமர்ந்தபடி சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் முதல்வர் விஜய், மக்களுக்கு கையசைத்தபடி வந்தார்.
அதனைத் தொடர்ந்து திருச்சி ஜோசப் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த அரங்கத்துக்கு வந்து சேர்ந்த முதல்வர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.
தவெகவின் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தப்பட்ட பேருந்தின் மீது அமைக்கப்பட்டிருந்த மேடையில் இருந்தபடி அமைச்சர் ஆனந்த் வரவேற்புரையும், முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், அமைச்சர் ரமேஷ் ஆகியோர் சிறப்புரையும் வழங்கினர்.
அதன்பின்னர் பேசிய முதல்வர் விஜய், “தமிழகத்துக்கு திருச்சி எப்படி ஓர் இதயம் போன்றதோ, அதுபோலவே என் இதயத்துக்கு திருச்சி கிழக்கு தொகுதி மக்கள்.
ஆட்சிக்கு வந்து சில வாரங்கள் கூட ஆகவில்லை. 6 மாதம் அமைதியாக இருப்போம் என்று சொன்னவர்களால், ஆறு நாள்கூட அமைதியாக இருக்க முடியவில்லை. பாவம் ஒரு கல்யாண வீட்டில்கூட போய் புலம்புகிறார்கள்.
இத்தனை ஆண்டுகளாக மாற்றி மாற்றி ஏமாற்றி ஆண்டு கொண்டிருந்தவர்களை ஒதுக்கிவிட்டு என்னை முதல் சேவகனாக ஆக்கியுள்ளீர்கள். அதற்கு நன்றி. எங்களுக்கு ஆதரவு தெரிவித்த அத்தனை இயக்கங்களின் தலைவர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.
எம்ஜிஆரின் முதல் தேர்தலில் கூட இவ்வளவு வாக்கு சதவீதம் வாங்கவில்லை என்றார்கள். ஆனால், தவெகவை அவ்வளவு ஆதரித்துள்ளீர்கள். நான் எம்ஜிஆரோடு என்னை ஒப்பிடவில்லை, எம்ஜிஆர் எம்ஜிஆர்தான். 1977-ல் ரீங்கள் போடாத ஓட்டை 2026-ல் நீங்கள் போட்டுள்ளீர்கள். இன்னும் கொஞ்சம் அதிகமாக ஆதரித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
எதிர்காலத்தில் வரும் அனைத்து தேர்தல்களிலும், உங்கள் ஆதரவை அதிகம் பெறமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நீங்கள் அமைத்துக் கொடுத்த ஆட்சியில் எல்லா நன்மைகளையும் கண்கூடாக பார்க்கப் போகிறீர்கள்.
யார் எந்தப் பொறுப்புக்கு போனாலும் கிண்டலும், கேலியும் இருக்கத்தான் செய்யும். அவர்களுக்கு ஒரே வேண்டுகோள். தயவு செய்து நிறுத்தி விடாதீர்கள். அதுதான் எனது ஆற்றல். நீங்கள் பேசிக்கொண்டே இருங்கள். நான் மக்களுக்கு நல்லது செய்துகொண்டே இருப்பேன்.
நான் கோட் சூட் போடுவது பற்றி விமர்சிக்கிறார்கள். ஏன் நாம் கோட் சூட் போடக் கூடாதா? அதிகாரம் செய்வோரும், ஆதிக்க சக்திகளும்தான் கோட் சூட் போட வேண்டுமா? நான் கலர் கலராகவா கோட் சூட் போடுகிறேன்? இரண்டே கலர். நம் மனதைப் போல கருப்பு - வெள்ளை மட்டுமே.
“மக்களுக்காக உழைக்க வந்துள்ள நீ அந்த வேலையை மட்டும் பார், உன்னை விமர்சிப்பவர்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்” என மக்கள் சொல்கிறார்கள். எனக்கு எதிரிகளே இல்லை என நினைக்க மாட்டேன். இப்போதும் இரண்டு பேருக்கும் இடையில்தான் போட்டி. ஒன்று திமுக, இன்னொன்று தவெக. மற்றும் பலருக்கு இங்கே ஒரு வேலையும் இல்லை.
விஜய் ஆட்சிக்கு வரக் கூடாது என்று திமுகவும், மற்றும் பலரும் சேர்ந்து ஒரு கூத்து நடத்தினார்களே? இப்படியெல்லாம் கூட நடக்குமா என யோசித்தோம்.
எதிர்காலம் என்பது உங்களுக்காக உண்மையாக உழைக்க வந்த விஜய்யா அல்லது நம் ஆட்சியை தடுக்க முயன்ற ஸ்டாலினா என்பதுதான்தான் போட்டி. நம்மை ஏளனமாகப் பேசுவதாக நினைத்து அவர்களே ஆப்பு வைத்துக் கொள்கிறார்கள். திமுக நம்மை அவமானப் படுத்துவதால் நமக்கு நன்மையே.
நாம் ஆட்சிக்கு வந்த பின்னர், ஜென்ஸியை மனதில் வைத்து தமிழ், ஆங்கிலம் கலந்து அறிக்கை வெளியிடுகிறார்கள். அதுபற்றி சொல்லவில்லை.
சட்டப்பேரவையில் யார் பேசினால் நமக்கு என்ன என்று நினைத்த கூட்டம் இப்போது அதனை உன்னிப்பாக கவனிக்கிறார்கள். திமுக சொல்வது போல ரீல்ஸ் போட்ட கூட்டம் இப்போது செய்தி பார்க்கிறார்கள். இப்படிப்பட்ட நம் மக்களை, தெய்வங்களை தற்குறிகள் எனச் சொல்கிறார்கள்.
நீங்கள் தற்குறி எனச் சொன்னவர்கள் தான் உங்கள் அரசியல் வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்கிவிட்டனர். இனியும் ஆக்குவார்கள். உண்மையில் மக்கள் மனதை புரிந்து வைத்திருந்தால் இப்படி அவர்கள் பேச மாட்டார்கள்.
அரசியல் புரிதல் இல்லாமல், கவர்ச்சியில் மயங்கி நமக்கு வாக்கு போட்டுவிட்டதாக சொல்கிறார்கள். உங்களுக்கு ஓட்டுப் போட்டால் நல்லவர்கள், எனக்கு ஓட்டு போட்டால் அவர்கள் தற்குறியா? இதே மக்கள்தானே இத்தனை ஆண்டுகளாக உங்களுக்கு ஓட்டுப் போட்டார்கள்.
அண்ணா ஆரம்பித்த கட்சியை அடிமைக் கூடாரம் ஆக்கிவிட்டு, ‘உண்மையை சொல் உடன்பிறப்பே?’ என கேள்வி கேட்கிறார். திமுக தோல்விக்கான காரணத்தை அறிய உங்கள் குடும்பத்தில் போய் கேள்வி கேளுங்கள் என உண்மையான திமுக உடன்பிறப்புகள் கூறுகிறார்கள். விஜய்தான் தமிழகத்தின் ஒரே பிரதிநிதி.
மக்களுக்கும், நமக்கும் உள்ள பூர்வஜென்ம பந்தத்தை பிரிக்க முயற்சி செய்தால் பலிக்காது. மக்கள் இப்போது மிகவும் தெளிவாகி விட்டார்கள். ஆக்கப்பூர்வமாக எதிர்க்கட்சியாக செயல்பட்டு மக்கள் மனதை வெல்லப் பாருங்கள்.
கடந்த ஒரு மாதத்தில் 200 யூனிட் இலவச மின்சாரம் கொடுத்துள்ளோம், அதில் ஏற்கெனவே இருந்த 100 யூனிட் திமுக கொடுத்தது இல்லை, ஜெயலலிதா கொடுத்தது. மக்களுக்கு தொந்தரவாக இருக்கும் டாஸ்மாக்கை மூடினோம். முடிந்த அளவு விவசாய பயிர்க் கடன் தள்ளுபடி செய்துள்ளேன். நீங்கள் நிதி சம்பந்தமான எல்லா கதவுகளையும் மூடி வைத்துவிட்டு அல்லவா சென்றுள்ளீர்கள். அதனை சரிசெய்ய வேண்டாமா?
நான் பொய் சொல்லி ஏமாற்ற அரசியலுக்கு வரவில்லை. உங்கள் கூட நிற்கவே வந்துள்ளேன். விவசாயிகள் கவலைப்பட வேண்டாம்.
சட்டம் - ஒழுங்கு சரியில்லை என புலம்புகிறீர்கள். உங்கள் மாடல் அரசில் எல்லா ஊரிலும், தெருவிலும் போதைப் பொருள் கலாச்சாரம் பரவியுள்ளது. அதனை ஆரம்பத்திலேயே சரிசெய்திருந்தால், பெண்களுக்கு எதிராக இவ்வளவு குற்றங்கள் நடந்திருக்குமா?
எல்லாவற்றையும் செய்துவிட்டு பழியை என் மீது போடுகிறார்கள். என்ன பழி போட்டாலும், மக்கள் நிம்மதியாக வாழும் சூழலை உருவாக்குவேன். அதற்காகவே நல்ல அதிகாரிகளை நியமித்துள்ளேன். சிங்கப்பெண் உள்ளிட்ட உறுதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளேன். என் மீது என்ன பழிபோட்டாலும், விஜய் மக்களுக்கு நல்லது செய்தே தீருவேன்.
ஆட்சியில் இல்லாதவர்கள் பற்றி ஏன் பேசுகிறீர்கள் என கேட்பார்கள். வேரில் வெந்நீர் ஊற்றியவர்களை பற்றி பேசாமல் இருக்க முடியுமா?
குதிரை பேரம் செய்கிறேன் என தவறான கதைகளை அடித்து விடுகிறார்கள். தீய சக்தியும், தீர்ந்து போன சக்தியும் ஒன்றாக சேர்ந்து, திருட்டுத்தனமாக பேரம் பேசி கூட்டுச் சேர்ந்து ஆட்சியமைத்து கொள்ளையடிக்க சதித் திட்டம் தீட்டினார்கள். ஏனென்றால், தவெக ஆட்சி அமைந்தால் அவர்கள் பிழைப்பே போய்விடும் என்றுதான்.
நடந்து முடிந்த தேர்தலில் 50, 60 ஆண்டுகளாக இருந்த சாதி, மதம், காசு கொடுத்து வாக்கு வாங்கும் முறையை ஒழித்துள்ளோம்.
நம்மை ஆதரிப்பவர்களை நிச்சயம் அரவணைப்போம். தவெக ஆட்சி எந்தப் பாகுபாடும் இல்லாத ஆட்சியாக இருக்கும். ஸ்டாலின் ஆட்சி போல ஊசலாட்டம் இருக்காது. மதசார்பற்ற கொள்கை, மாநில உரிமை, நதிநீர் உரிமை, சமூக நீதியை விட்டுக் கொடுக்கவே மாட்டோம்.
திருச்சி கிழக்கு, பெரம்பூர் தொகுதி இரு கண்கள் மாதிரி. வரும் இடைத்தேர்தலில் உங்கள் வீட்டில் உள்ள ஒருவரை வேட்பாளராக்குவோம். அவரை வெற்றி பெற வையுங்கள். ஊழல் இல்லாத, லஞ்சம் இல்லாத ஆட்சியை நிச்சயம் உருவாக்குவேன்” என்று முதல்வர் விஜய் பேசினார்.