புதுடெல்லி: ‘மாற்றுக் கட்சிகளில் இருந்து தவெகவில் இணைபவர்கள் எல்லோரும் தூய்மையானவர்கள் என்று சான்றளிக்க முடியாது. ஆனால், தவெக தலைவர் நேர்மையான அரசியல் செய்ய விரும்புகிறார்” என்று தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “நாடு முழுவதும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் இதர போட்டித் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு என்பது மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
அடுத்ததாக, அயோத்தி ராமர் கோயிலில் நடைபெற்ற உண்டியல் திருட்டு விவகாரமும் மிக முக்கியமான பிரச்சினை. இந்த உண்டியல் திருட்டில் ஈடுபட்டவர்களைக் காப்பாற்றுவதற்காக பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் முயற்சி செய்து வருகின்றன.
மத்திய அரசின் தொகுதி மறுவரையறை, அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்தல், புதிய கல்வித் துறை சட்டங்கள் என அனைத்தையும் ஒட்டுமொத்த தமிழகமே எதிர்க்கிறது. எனவே, நாடாளுமன்றத்தில் உள்ள கட்சிகள் பிரச்சினை அடிப்படையில் ஒருமுகமாக முடிவெடுப்பார்கள் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
மேலும், 100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்றி, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதி ஒதுக்கீட்டில் சுமார் 5,000 கோடி ரூபாயை மத்திய அரசு குறைத்துள்ளது. இதனால் தமிழக அரசு தனது சொந்த பட்ஜெட்டில் இருந்து நிதி வழங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதையும் நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிர்ப்போம். மோடி அரசினுடைய அனுமதி இல்லாமல் கர்நாடகாவால் மேகேதாட்டுவில் அணை கட்ட முடியாது. எனவே திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி கொடுக்கக் கூடாது.
சமீபத்தில் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய பஞ்சாயத்துத் தலைவரை உடனடியாகக் கட்சியில் இருந்து நீக்கிய தவெக அரசின் ‘ஜீரோ கரப்ஷன்’ கொள்கையை நாங்கள் பாராட்டுகிறோம். மாற்றுக் கட்சிகளில் இருந்து தவெகவில் இணைபவர்கள் எல்லோரும் தூய்மையானவர்கள் என்று நாம் சான்றளிக்க முடியாது. ஆனால், தவெக தலைவர் நேர்மையான அரசியல் செய்ய விரும்புகிறார், தொண்டர்களும் நேர்மையை விரும்புகிறார்கள்.
கச்சத்தீவைப் பொறுத்தவரை, அன்றைய காலகட்டத்தில் நிலவிய சர்வதேச சூழல் மற்றும் இந்தியாவின் அண்டை நாட்டு உறவுகளின் நன்மையைக் கருதியே அப்போதைய மத்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்தது. அந்த முடிவு அப்போதைய சூழலுக்குச் சரியானதுதான் என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது. அதைத் திரும்பப் பெற வேண்டிய அவசியம் இல்லை” என்று அவர் கூறினார்.