தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக, திமுக எம்எல்ஏக்கள் 2 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்ட நிலையில், மாவட்ட எஸ்பி அபிஷேக் குப்தா திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அபிஷேக் குப்தா நேற்று திடீரென சிவகங்கை மாவட்டத்துக்கும் அங்கிருந்த ஆர்.சிவபிரசாத் தூத்துக் குடிக்கும் எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் கே.மணிவாசன் பிறப்பித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக திமுக எம்எல்ஏக்கள் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனும் ஜி.வி.மார்க்கண்டேயனும் அடுத்தடுத்த கைது செய்யப்பட்டனர்.
அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டபோது, தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணையுமாறு மிரட்டப்பட்டதாக புகார் தெரிவித்தார். இதேபோல் ஜி.வி.மார்க்கண்டேயன், தன்னை துப்பாக்கி முனையில் போலீஸார் மிரட்டியதாக கூறியிருந்தார். அப்போது, அவரிடம் பேட்டி எடுக்க முயன்ற செய்தியாளர்களை ஏடிஎஸ்பி தீபு ஒருமையில் பேசி மிரட்டல் விடுத்தார். கடும் கண்டனம் எழுந்தது.
இந்நிலையில், தூத்துக்குடி எஸ்பி அபிஷேக் குப்தா திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் 4 எஸ்பிக்கள் மாற்றப்பட்டுள்ளனர். தூத்துக்குடி எஸ்பியாக இருந்த ஆல்பர்ட் ஜான் மத்திய அரசு பணிக்குச் சென்றதை தொடர்ந்து, சிலம்பரசனும் பின்னர் சி.மதனும் பொறுப்பேற்றனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், அபிஷேக் குப்தா பொறுப்பேற்றார். 2 மாதங்களே ஆன நிலையில் அவரும் மாற்றப்பட்டார்.