மதுரை: தொலைதூரப் பயணத்தைச் சுகமாக்கும் வசதிகளுடன் திருவனந்தபுரம்-தாம்பரம் இடையே இன்று முதல் ‘அம்ரித் பாரத்’ புதிய ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
மதுரை வழியாக திருவனந்தபுரம் - தாம்பரம் ‘அம்ரித் பாரத்’ என்ற வாராந்திர புதிய எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இன்று (ஜன. 23) தொடங்குகிறது. பிரதமர் நரேந்திர மோடி இதை தொடங்கி வைக்கிறார்.
22 ரயில் பெட்டிகள்: மொத்தம் 22 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் ‘வந்தே பாரத்’ ரயில்போல இருபுறமும் ரயில் பெட்டிகளுடன் இணைந்த இன்ஜின்கள் உள்ளன. மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கத் தகுதி உடைய இந்த ரயிலில் எவ்வித குலுங்கல் இன்றி பயணத்தை இனிமையாக்கும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
நவீன சொகுசு வசதி கொண்ட இருக்கை, படுக்கை அமைப்புகள், குடிநீர் பாட்டில், மொபைல் போன்றவற்றை பாதுகாப்பாக வைக்கும் வசதி,
மடித்து வைக்கும் சிறிய உணவு மேஜை, ஒளி விளக்குகள், பொது அறிவிப்பு, இரவு நேரத்தில் எளிதாக நடக்கும் வகையில் ரேடியம் ஒளிரும் தரை விரிப்புகள், இரவில் அவசரத் தேவைக்கு பெட்டிக்கு வெளியே ஒளிரும் விளக்குகள் உள்ளிட்ட முக்கிய சிறப்பு அம்சங்களும் இந்த ரயிலில் இடம்பெற்றுள்ளன.
குளித்துறை, நாகர்கோவில், வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி,ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டில் இந்த ரயில் நின்று செல்லும்.
இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: திருவனந்தபுரம்-தாம்பரம் அம்ரித் பாரத் ரயிலின் அறிமுகம், கேரளா- தமிழ்நாடு இடையிலான ரயில் இணைப்பை வலுப்படுத்தும். கேரளாவின் தலைநகரை தமிழ்நாட்டின் முக்கிய புறநகர் மற்றும் போக்குவரத்து மையங்களில் ஒன்றான தாம்பரத்துடன் இணைப்பதால், 2 மாநிலங்களுக்கும் இடையே தொடர்ந்து பயணிக்கும் பயணிகளுக்கு நம்பகமான வழித்தடமாக இருக்கும்.
பயண நேரத்தை குறைக்கும்: காஞ்சிபுரம். விழுப்புரம், கடலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்கள் வழியாகச் சென்று திருவனந்தபுரத்தை இணைக்கும் இச்சேவையால் முக்கிய தொழில், கல்வி, கலாச்சார, புனிதத் தலங்கள் ஒன்றிணைக்கப்படுகின்றன.
இந்த சேவை மிகவும் அவசியமான மற்றும் சரியான நேரத்தில் தொடங்கப்படுகிறது. நவீன வசதிகளுடன் கூடிய இந்த ரயில் நெடுந்தூரப் பயணத்துக்கு வசதியாக இருக்கும். தாம்பரம்-திருவனந்தபுரம் இடையிலான பயண நேரத்தைக் குறைக்கும். இவ்வாறு தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.