தமிழகம்

திருப்பரங்குன்றம் விவகாரம்: உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு

மோகன் கணபதி

புதுடெல்லி: திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் உள்ள தீபத்​தூணில் ஆண்​டு​தோறும் திருக்​கார்த்​திகை நாளன்று தீபம் ஏற்ற வேண்​டும் என்ற சென்னை உயர்​ நீ​தி​மன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் உள்ள தீபத்​தூணில் கடந்​தாண்டு டிச.3-ம் தேதி தீபம் ஏற்​றக் கோரி மதுரையைச் சேர்ந்த ராமரவி​கு​மார் உள்​ளிட்​டோர் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனுத்தாக்​கல் செய்​தனர். அந்த மனுக்​களை விசா​ரித்த சென்னை உயர் நீ​தி​மன்ற தனி நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், தீபத்​தூணில் கார்த்திகை திரு​நாள் அன்று தீபம் ஏற்ற வேண்​டும் என கடந்த 2025 டிச.1-ல் உத்​தர​விட்டார்.

ஆனால், இந்த உத்​தரவு நிறைவேற்​றப்​ப​டாத நிலை​யில், மதுரை மாவட்ட ஆட்​சி​யர், மாநகர் காவல் ஆணை​யர் மற்றும் கோயில் செயல் அலு​வலர் ஆகியோ​ருக்கு எதி​ராக நீதி​மன்ற அவம​திப்பு வழக்கு தொடரப்​பட்​டது. இதையடுத்து ஆட்​சி​யர், காவல் ஆணை​யர், செயல் அலுவலர் ஆகியோர் நீதி​மன்​றத்​தில் ஆஜராகி நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்​றாததற்​காக வருத்​தம் தெரி​வித்​தனர்.

இதனைத் தொடர்ந்​து, தனி நீதிபதி உத்​தரவை எதிர்த்து தமிழக அரசும், அவம​திப்பு நடவடிக்​கையை எதிர்த்து அதி​காரி​களும் உயர் ​நீ​தி​மன்ற மதுரை அமர்​வில் மேல்முறையீடு செய்​தனர். அந்த மேல்​முறை​யீட்டு மனுக்களை விசா​ரித்த மதுரை அமர்வு, அதி​காரி​களுக்கு எதி​ரான நீதி​மன்ற நடவடிக்​கைக்கு தடை ​வி​தித்து உத்தரவிட்​டது.

அதே வேளை​யில், ஒவ்​வொரு ஆண்​டும் கார்த்​திகை திருநாளன்று திருப்​பரங்​குன்​றம் மலை​யில் உள்ள தீபத்​தூணில் தீபம் ஏற்ற வேண்​டும் என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்​தரவை உறுதி செய்​தது.

இதனையடுத்​து, தனி நீதிப​தி​யின் உத்​தரவை உறுதி செய்து மதுரை அமர்வு பிறப்​பித்த உத்​தர​வுக்கு எதி​ராக கோயில் நிர்​வாகம் தரப்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டது.

இந்த மனு, நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று (திங்கள்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

திருப்பரங்குனம் மலையை இந்திய தொல்லியல் துறை தனது கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும் என்றும், சர்ச்சைக்குரிய இடத்தில் தினமும் விளக்கேற்ற உத்தரவிட வேண்டும் என்றும் கோரி இந்து தர்ம பரிஷத் அமைப்பு தாக்கல் செய்திருந்த மனுவுடன், அரசின் மனுவையும் இணைத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்ற அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், ஜனவரி மாதம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து அரசு ஏன் ஜூன் மாதத்தில் மனு தாக்கல் செய்தது என கேள்வி எழுப்பியது.

மேலும், உயர் நீதிமன்றத்தில் மனுதாரர்களாக இருந்த இந்தியத் தொல்லியல் துறை, தமிழ்நாடு வக்பு வாரியம், சிக்கந்தர் பாதுஷா தர்கா நிர்வாகம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், தடை கோரும் மனு மீதும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகள் தொடர்பான உத்தரவுகளை எதிர்த்து மாநில அரசு கடந்த ஆண்டு டிசமபரில் சிறப்பு விடுப்பு மனுவை தாக்கல் செய்தது. ஆனால், அது உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை. விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு ஜூன் 11 அன்று உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT