நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் | கோப்புப் படம்

 
தமிழகம்

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டுவர இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் முன்னெடுப்பு

மோகன் கணபதி

புதுடெல்லி: திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட்ட உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவி நீக்கத் தீர்மானத்தைக் கொண்டு வர இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுத்து வருவதாக மார்க்சிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகப் பேசிய சு.வெங்கடேசன், "இண்டியா கூட்டணி எம்பிக்களின் கையெழுத்துகளை நாங்கள் சேகரித்து வருகிறோம். அவற்றை நாடாளுமன்றத்தில் நாளை (டிச.9) சமர்ப்பிப்போம்" எனத் தெரிவித்தார்.

உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றால், அதற்கு மக்களவை உறுப்பினர்கள் 100 பேரின் ஆதரவு அல்லது மாநிலங்களவை உறுப்பினர்கள் 50 பேரின் ஆதரவு அவசியம். இந்த தீர்மானம் ஏற்கப்பட்டால், மூன்று பேர் கொண்ட குழு அதனை விசாரிக்கும். அதனைத் தொடர்ந்து வாக்கெடுப்பு நடத்தப்படும்.

இரு அவைகளும் சிறப்பு பெரும்பான்மையுடன் (மூன்றில் இரண்டு பங்கு ஆதரவுடன்) தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அது குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்கப்படும். அவர், நீதிபதியை பதவி நீக்கம் செய்ய உத்தரவு பிறப்பிப்பார்.

எனினும், இந்தியாவில் இதுவரை எந்த ஒரு நீதிபதியும் இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என ராம.ரவிக்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவுப்படி தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. தீபம் ஏற்றச் சென்ற மனுதாரர் மற்றும் பாஜகவினர், இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்தோர் போலீஸாரால் தடுக்கப்பட்டனர். நீதிபதியின் இந்தத் தீர்ப்பை கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தை உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சிகள் கடும் விமர்சனம் செய்தன என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT