திருப்பரங்குன்றம் கோயிலில் நடந்த தள்ளுமுள்ளு.

 
தமிழகம்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் 12 பேர் கைது - 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு!

என்.சன்னாசி

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் 12 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை திருப்பரங்குன்றம் கோயி​லில் நவ.25-ம் தேதி கொடியேற்றத்​துடன் திருக்​கார்த்​திகை தீபத் திரு​விழா தொடங்கியது. வழக்​க​மாக உச்​சிப் பிள்​ளை​யார் கோயில் முன் தீபம் ஏற்​றப்​படும். இந்​நிலை​யில், நடப்​பாண்டு மலை உச்​சி​யில் உள்ள தீபத் தூணிலும் கார்த்​திகை தீபம் ஏற்ற வேண்​டும் என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கடந்த டிச.1 உத்​தர​விட்​டது.

இதையடுத்​து, திருப்பரங்குன்றம் முழு​வதும் காவல் ஆணை​யர் லோக​நாதன் தலை​மை​யில் நேற்று போலீ​ஸார் குவிக்​கப்பட்​டனர். இந்​நிலை​யில், நீதி​மன்ற உத்​தர​வுப்​படி மலை உச்​சி​யில் உள்ள தீபத் ​தூணில் தீபம் ஏற்றுவதற்குரிய நெய், காடாத்​துணி போன்றவற்றை நேற்று பிற்​பகல் கோயில் பணி​யாளர்​கள் கொண்டு சென்றனர்.

இந்து முன்​னணி மாநிலத் தலை​வர் காடேஸ்​வரா சுப்பிரமணி​யம், பாஜக மாநிலப் பொதுச் செய​லா​ளர் ராம.சீனி​வாசன் தலை​மை​யில் ஏராள​மானோர் திரண்​டு, மாலை 5 மணி​யள​வில் 16 கால் மண்​டபம் முன் அமர்ந்து கந்​தசஷ்டி கவசம் பாடினர். இதில் ஆயிரக்​கணக்​கானோர் கலந்து கொண்​டனர்.

இதற்​கிடை​யில், மாலை 6 மணி​யள​வில் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் பால தீபம் ஏற்​றப்​பட்​டது. பின்​னர் உச்சிப் பிள்​ளை​யார் கோயில் முன்​புள்ள தீபத்​தூணில் மகா தீபம் ஏற்​றப்​பட்​டது. ஆனால், மலை உச்சி தீபத்​தூணில் தீபம் ஏற்ற எந்த நடவடிக்​கை​யும் எடுக்கப்படவில்லை என்ற தகவல் பரவியது.

இதனால் அதிருப்தி அடைந்த இந்து முன்​னணி, பாஜக​வினர் மற்றும் பக்​தர்​கள் திரண்டு தீபத்​தூணில் தீபம் ஏற்​றக்​கோரி கோஷமிட்​டபடி, போலீ​ஸாரின் தடைகளை அப்​புறப்​படுத்தி 16 கால் மண்​டபம் வரை முன்னேறினர்.

அவர்​களைத் தடுக்க முயன்ற போலீ​ஸாருக்​கும், இந்து அமைப்​பினருக்​கும் இடையே தள்​ளு​முள்ளு ஏற்​பட்​டது. இதில் போலீ​ஸார் உள்​ளிட்ட சிலர் காயமடைந்​தனர். பின்​னர் தடைகளை மீறி “வீர​வேல், வெற்​றிவேல், முரு​க​னுக்கு அரோக​ரா” என கோஷம் எழுப்​பிய​வாறு கோயிலை நோக்கி ஏராள​மானோர் சென்​றனர். தொடர்ந்து போலீஸாருடன் வாக்குவாதம், தள்ளுமுள்ளு என்று சிறிது நேரத்தில் அங்கு பரபரப்பு கூடியது. தொடர்ந்து அங்கு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் 12 பேரை திருப்பரங்குன்றம் போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அனுமதி மறுப்பு: இதற்கிடையில், திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் நேற்று இரவு கைது செய்யப்பட்ட இந்து அமைப்பை சேர்ந்த 12 பேரில் முத்து முருகன் என்னும் ஒருவர் மட்டும்தான் தெரிவதாகவும், மீதமுள்ள 11 பேர் யார் என்று விவரம் கேட்பதற்காக பாஜக வழக்கறிஞர்கள் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்திற்கு வந்திருந்தனர். காவல் துறையினர் அவர்களை பார்க்க அனுமதிக்கவில்லை. மேலும் காவல் நிலைய நுழைவு வாயில் கதவுகளை அடைத்து வைத்திருந்தனர்.

இதுகுறித்து வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் கூறுகையில், “திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதற்காக நேற்று இந்து அமைப்பினர் கூடியிருந்தோம். அப்போது காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதன் காரணமாக சிலரை நள்ளிரவில் அராஜகமாக கைது செய்து கொண்டு வந்துள்ளனர். இப்போது வரை 12 பேரை கைது செய்துள்ளனர்.

வழக்கறிஞர் அம்மு பிரியா என்பவரின் தந்தை முத்து முருகன் என்பவரை இரவு நேரத்தில் நள்ளிரவு 2.30 மணி அளவில் அராஜகமாக கைது செய்திருக்கின்றனர். வழக்கறிஞரையும் சந்திக்க அனுமதிக்கவில்லை. இது மனித உரிமை மீறல். அவரது ரத்த உறவுகளையாவது பார்த்த அனுமதிக்க வேண்டும் இதில் யாரும் குற்றவாளிகள் இல்லை. பாஜக, இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் பொதுவான பிரச்சனைக்காக போராடியவர்கள். 

பொது சொத்தை சேதப்படுத்தியது உட்பட எட்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். கைது செய்து சிறையில் அடைப்போம் நீங்கள் நீதிமன்றத்தில் பேசிக்கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள். முத்து முருகனைத் தவிர கைது செய்யப்பட்டவர்களின் விவரங்கள் தெரியவில்லை. யார் இந்த தகவலும் சொல்ல மறுக்கிறார்கள் வழக்கறிஞர் பிரிவு மாவட்டத் தலைவர் ஆன என்னையும் பார்க்க விட அனுமதிக்கவில்லை” என்றார்.

கைது செய்யப்பட்ட முத்து முருகனின் மகள் அம்மு பிரியா கூறுகையில், “நேற்று இரவு 2:30 மணி அளவில் வந்து அப்பாவை விசாரணைக்காக அலெக்ஸ் செல்வதாக கூறிய அனைத்து சென்றனர். ஆனால் தற்போது வரை அவரை வெளியிடவும் இல்லை, அவரை பார்க்கவும் அனுமதிக்கவில்லை. தற்போது தான் அவரைப் பார்த்து விட்டு வந்தேன்.

எனது அப்பா இதில் எதுவும் தலையிடவும் இல்லை. இவர் எதுவும் செய்யவும் இல்லை. ஆனால் தங்களிடம் வீடியோ ஆதாரம் உள்ளது என்று அவர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். எனது அப்பா சாமி கும்பிடுவதற்காக சென்றவர். அவர் கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லை, அவருக்கும் இந்த வழக்குக்கும் இந்த சம்பந்தமும் இல்லை. எனது அப்பாவை பக்தராக பார்க்கவில்லை, அவரை குற்றவாளியாக பார்க்கிறார்கள்” என்றார்.

SCROLL FOR NEXT