மதுரை: 2026-ல் அதிமுக ஆட்சி மலர்ந்ததும் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும் என்று அதிமுக அமைப்புச் செயலாளரும், திருப்பரங்குன்றம் எம்எல்ஏவுமான வி.வி.ராஜன் செல்லப்பா கூறினார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: மதுரைக்கு திமுக அரசு எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை. தற்போது முதல்வர் திடீரென மதுரையின் வளர்ச்சி பற்றி பேசுவது வியப்பளிக்கிறது. திருப்பரங்குன்றத்தில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர்.
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதை மக்கள் யாரும் தடுக்கவில்லை. திமுக அரசுதான் காவல்துறையை வைத்து தடுத்திருக்கிறது. மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்கப் பார்க்கின்றனர்.
நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாகக் கூறும் காவல்துறை, தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதித்த உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததற்கு காரணம் என்ன? மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியை திமுக மேற்கொள்கிறது.
திமுகவின் மத அரசியல் ஒருபோதும் வெற்றி பெறாது. மக்களின் மத உணர்வுகளை கெடுக்க முயற்சிக்கும் திமுக அமைச்சர்கள், அரசுக்கு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். 2026-ல் பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சிக்கு வரும். அப்போது திருப்பரங்குன்றத்தில் ஒளி (தீபம்) ஏற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.