இந்து முன்னணி அமைப்புச் செயலாளர் ராஜேஷ்
மதுரை: “இந்துக்கள் எப்போதும் சும்மாயிருக்க மாட்டார்கள். இதை திமுக அரசு புரிந்துகொள்ள வேண்டும்” என இந்து முன்னணி அமைப்புச் செயலாளர் ராஜேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வு வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “திருப்பரங்குன்றம் வழக்கில் நீதி வென்றுள்ளது. முருகனின் அருளால் தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவு வந்துள்ளது. தனி நீதிபதியின் உத்தரவு இரு நீதிபதிகள் அமர்விலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. தனி நீதிபதியின் உத்தரவை காவல் துறை முழுமையாக நிறைவேற்ற அனுமதிக்கவில்லை.
அறநிலையத் துறை நயவஞ்சமாக செயல்பட்டு முதுகில் குத்தும் விதமாக இந்துக்களை ஏமாற்றும் வகையில் செயல்பட்டுள்ளது. தீபம் ஏற்றுவதற்கான எந்த வேலையையும் அறநிலையத் துறை செய்யவில்லை. காவல் துறையும் மக்களுக்கு அழுத்தம் கொடுத்துள்ளது. இதனால் அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டடது.
எல்லா காலத்திலும் திமுக அரசு இந்து விரோத அரசாக செயல்பட்டு வருகிறது. ஓட்டு வாங்க இந்துக்களை தாஜா செய்கின்றனர். உண்மையில் பச்சை துரோகம் செய்கிறது.
தீபத் தூணில் தீபம் ஏற்ற முஸ்லிம்கள் எந்த ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை. தர்கா தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. ஒரு திட்டமிட்ட அஜெண்டாவுடன் திமுக அரசு செயல்படுகிறது. அதன் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் தடுத்துள்ளனர்.
நீதிமன்றத்தின் உத்தரவால் சட்டத்தின் மூலம் இந்துக்களின் நூறாண்டு கனவு குறிப்பாக ராமகேபாலன், ராஜகோபாலன் ஆகியோரின் கனவு நனவாகியுள்ளது. இனிமேலாவது தீபத் தூணில் தீபம் ஏற்ற திமுக அரசு முயற்சிக்க வேண்டும்.
திமுக அரசு மதசார்பற்ற அரசு என சொல்லிக்கொண்டு இதுபோன்ற வேலைகளை செய்து வருகிறது. இந்த அரசுக்கு இந்துக்களும் ஓட்டுப்போட்டுள்ளனர். ஆனால் இந்துக்களுக்கு எதிராக செயல்படுகிறது. இந்துக்களுக்கு எதிராக 144 தடையாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்துக்களை கோயிலுக்குள் சாமி கும்பிட அனுமதி மறுக்கின்றனர்.
இந்துக்களுக்கு எதிராக வன்மத்துடன் திமுக அரசு செயல்பட்டு வருகிறது. அரசே திட்டமிட்டு கலவரத்தை தூண்டி வருகிறது. தீபம் ஏற்றப்பட்டால் ஒருதரப்பினர் வருத்தப்படுவார்கள் என்கிறார்கள். அது உண்மையல்ல. இஸ்லாமியர்களுக்கு இந்துக்களை விரோதிகள் என சித்திரித்து இஸ்லாமியர்களை அரசு இழிவுபடுத்தி வருகிறது. இந்த சம்பவத்தை பயன்படுத்தி அரசு ஏதோ செய்ய வேண்டும் என நினைக்கிறது.
இனிமேலாவது நயவஞ்சகமாக செயல்படாமல், பின்புறம் இருந்து குழிபறிக்கும் வேலை செய்யாமல் தீபம் ஏற்ற வேண்டும். சிலரை பகடைக்காயாக வைத்து விளையாடுகின்றனர். நீதித் துறைக்கும் அரசுக்கும் பிரச்சினை என காவல் துறை விவகாரத்தை திசை திருப்பியுள்ளது.
கருணாநிதி இறந்தபோது இரவோடு இரவாக நீதிமன்றத்தை நாடி மெரினாவில் உடலை அடக்கம் செய்ய உத்தரவு பெற்றது திமுக. அந்த உத்தரவை வழங்கிய நீதிமன்றம் தான் இந்த உத்தரவையும் வழங்கியுள்ளது.
இந்த உத்தரவை நிறைவேற்ற மறுப்பது ஏன்? எப்போதும் இந்துக்கள் சும்மாயிருக்கமாட்டார்கள். இதை திமுக அரசு புரிந்துகொள்ள வேண்டும். இந்த வாரம் முழுவதும் கார்த்திகை தீபம் ஏற்றலாம். கண்டிப்பாக தீபத் தூணில் தீபம் ஏற்றுவோம். நீதிமன்ற உத்தரவை காவல் துறை புரிந்து கொள்ள வேண்டும். இது இந்துக்களின் மனக்குமுறல், உரிமை குரல். தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதை பார்க்க இந்துக்கள் ஆர்வமாக உள்ளனர்” அவர் கூறினார்.