தமிழகம்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ராம ரவிக்குமார் மீதுதான் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட்டில் அரசு வாதம்

கி.மகாராஜன்

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்​சி​யில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் ஏற்பட்ட பதற்றம் தொடர்பாக மனுதாரர் ராம ரவிக்குமார் மீதுதான் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வாதிட்டது.

திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் தீர்ப்பால் ஏற்பட்டுள்ள பதற்றம் தொடர்பாக அரசு தரப்பு மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்து, உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமென நேற்றிரவு தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா முன் முறையீடு செய்யப்பட்டது.

உடனடியாக ஐகோர்ட் கிளையில் நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வில் முறையீடு செய்யுமாறு தலைமை நீதிபதி அறிவுறுத்தினார். இதைத் தொடர்ந்து அரசுத் தரப்பில் ஐகோர்ட் கிளை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் அமர்வில் முறையீடு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கேகே ராமகிருஷ்ணன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதம் வருமாறு: திருப்பரங்குன்றம் மலை உச்​சி​யில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கவில்லை. நாங்கள் மேல்முறையீடு செய்யத் தயாராகி வந்தோம். ஆனால், அதற்குள் உயர் நீதிமன்ற பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்போடு மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்ற மனுதாரருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இது சட்டவிரோதமானது.

இந்த உத்தரவால் திருப்பரங்குன்றத்தில் சட்டம் ஒழுங்கு, சமூக நல்லிணக்கம் பாதிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் 10 பேருடன் சென்று தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அவர் ஒரு படையையே திரட்டிச் சென்றார். மேலும் சிஐஎஸ்எஃப் வீரர்கள் உயர் நீதிமன்ற வளாக பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு உயர் நீதிமன்ற வளாகத்தைத் தாண்டி எந்த அதிகாரமும் இல்லை. அவர்களை சட்டம் ஒழுங்கு பணி மேற்கொள்ள அனுமதிக்க முடியாது. மேலும், மனுதாரரை பாதுகாப்பதும் சிஐஎஸ்எஃப் வீரர்கள் பணியல்ல. மனுதாரருக்கு தீபம் ஏற்றுவதைத் தாண்டி மறைமுக உள்நோக்கம் உள்ளது.

அவரால் திரண்ட கூட்டத்தினர் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் போலீஸ் மீது தாக்குதல் நடந்தது. காவலர்கள் சிலர் காயமடைந்துள்ளனர். மலைக்குச் செல்லும் வாயில்கள் சேதம் அடைந்துள்ளது. எனவே மனுதாரர் ராம ரவிக்குமார் மீதுதான் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அரசுத் தரப்பு வாதத்தை முன்வைத்துள்ளது.

நடந்தது என்ன? முன்னதாக, மதுரை திருப்பரங்குன்றம் கோயி​லில் நவ.25-ம் தேதி கொடியேற்றத்​துடன் திருக்​கார்த்​திகை தீபத் திரு​விழா தொடங்கியது. முக்​கிய நிகழ்ச்​சி​யான தீபத் திரு​விழாவையொட்டி நேற்று காலை வைரத் தேரோட்​டம் நடை​பெற்​றது.

வழக்​க​மாக உச்​சிப் பிள்​ளை​யார் கோயில் முன் தீபம் ஏற்​றப்​படும். இந்​நிலை​யில், நடப்​பாண்டு மலை உச்​சி​யில் உள்ள தீபத் தூணிலும் கார்த்​திகை தீபம் ஏற்ற வேண்​டும் என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கடந்த டிச.1 உத்​தர​விட்​டது.

இதையடுத்​து, திருப்பரங்குன்றம் முழு​வதும் காவல் ஆணை​யர் லோக​நாதன் தலை​மை​யில் நேற்று போலீ​ஸார் குவிக்​கப்பட்​டனர். இந்​நிலை​யில், நீதி​மன்ற உத்​தர​வுப்​படி மலை உச்​சி​யில் உள்ள தீபத்​தூணில் தீபம் ஏற்​று​வதற்​குரிய நெய், காடாத்​துணி போன்றவற்றை நேற்று பிற்​பகல் கோயில் பணி​யாளர்​கள் கொண்டு சென்​றனர்.

இந்து முன்​னணி மாநிலத் தலை​வர் காடேஸ்​வரா சுப்​பிரமணி​யம், பாஜக மாநிலப் பொதுச் செய​லா​ளர் ராம.சீனி​வாசன் தலை​மை​யில் ஏராள​மானோர் திரண்​டு, மாலை 5 மணி​யள​வில் 16 கால் மண்​டபம் முன் அமர்ந்து கந்​தசஷ்டி கவசம் பாடினர். இதில் ஆயிரக்​கணக்​கானோர் கலந்து கொண்​டனர்.

இதற்​கிடை​யில், மாலை 6 மணி​யள​வில் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் பால தீபம் ஏற்​றப்​பட்​டது. பின்​னர் உச்​சிப் பிள்​ளை​யார் கோயில் முன்​புள்ள தீபத்​தூணில் மகா தீபம் ஏற்​றப்​பட்​டது. ஆனால், மலை உச்சி தீபத்​தூணில் தீபம் ஏற்ற எந்த நடவடிக்​கை​யும் எடுக்​கப்​பட​வில்லை என்ற தகவல் பரவியது.

இதனால் அதிருப்தி அடைந்த இந்து முன்​னணி, பாஜக​வினர் மற்றும் பக்​தர்​கள் திரண்டு தீபத்​தூணில் தீபம் ஏற்​றக்​கோரி கோஷமிட்​டபடி, போலீ​ஸாரின் தடைகளை அப்​புறப்​படுத்தி 16 கால் மண்​டபம் வரை முன்னேறினர்.

அவர்​களைத் தடுக்க முயன்ற போலீ​ஸாருக்​கும், இந்து அமைப்​பினருக்​கும் இடையே தள்​ளு​முள்ளு ஏற்​பட்​டது. இதில் போலீ​ஸார் உள்​ளிட்ட சிலர் காயமடைந்​தனர். பின்​னர் தடைகளை மீறி “வீர​வேல், வெற்​றிவேல், முரு​க​னுக்கு அரோக​ரா” என கோஷம் எழுப்​பிய​வாறு கோயிலை நோக்கி ஏராள​மானோர் சென்​றனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்​பட்​டது. இதற்​கிடை​யில், திருப்பரங்குன்றம் பகு​தி​யில் மக்​கள் கூடு​வதை தடுக்க 144 தடை உத்​தரவை ஆட்​சி​யர் பிர​வீன்​கு​மார் பிறப்​பித்​தார்.
 

SCROLL FOR NEXT