தமிழகம்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றாத விவகாரம்: தமிழக அரசுக்கு எதிரான அவமதிப்பு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படாத விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் மற்றும் புதிய இடையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று (27-ம் தேதி) விசாரணைக்கு வரவுள்ளன.

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு ஒருமுறை மட்டும் இடைக்கால அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் கடந்த 20-ம் தேதி உத்தரவிட்டிருந்தது.

ஆனால், நவம்பர் 24-ம் தேதி கார்த்திகை திருநாள் அன்று திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாமல், உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே உள்ள தீப மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டது.

உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த முடியாததற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் உச்ச நீதிமன்றத்திடம் மனப்பூர்வமாக மன்னிப்பும் கோரியிருந்தார்.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே மீறியதாகக் கூறி, மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் டி.ஜி.வினய், மதுரை காவல் ஆணையர் எஸ்.ராஜேந்திரன், காவல் துணை ஆணையர் இனிகோ விஜயன், கோயில் செயல் அலுவலர் மற்றும் 5 அறங்காவலர்கள் உள்ளிட்டோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராம ரவிக்குமார், வி.ராமசுப்பு, இந்து தர்ம பரிஷத் அமைப்பு உள்ளிட்ட பலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்தனர்.

ராம ரவிக்குமார் தாக்கல் செய்த மனுவில், ‘திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதித்த உச்ச நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தாமல் இருக்க, தமிழக முதல்வர் விஜய் அல்லது அமைச்சர்கள் எவரேனும் உத்தரவு பிறப்பித்தனரா? அரசு மட்டத்திலான முழு முடிவெடுக்கும் நடைமுறையையும் வெளிப்படுத்தி, தமிழகத் தலைமைச் செயலாளர் தனிப்பட்ட பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்.

உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் இருக்க அங்கீகாரம் அளித்தவர், உத்தரவிட்டவர் எனக் கண்டறியப்படுபவர்கள் மீது தாமாக முன்வந்து குற்றவியல் அவமதிப்பு நடவடிக்கை எடுப்பதை நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும். மேலும், அரசியலமைப்புச் சட்டத்தின் 142-வது பிரிவின் கீழ் உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, தீபத்தூணில் தீபம் ஏற்ற 7 நாட்களுக்குள் புதிய தேதியை உச்சநீதிமன்றம் நிர்ணயிக்க வேண்டும்’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுக்களை அவசரம் கருதி உடனடியாக விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல்.எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வில் மனுதாரர்கள் சார்பில் முறையிடப்பட்டது.அந்த முறையீட்டை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் அமர்வு, திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அவமதிப்பு நடவடிக்கை கோரிய வழக்குகள், இடைக்கால மனுக்கள் உள்ளிட்டவற்றை இன்று (27-ம் தேதி) விசாரணைக்கு எடுப்பதாக உறுதியளித்தது. இதன்படி வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT