தமிழகம்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது சமணர் கால தூண்: உயர் நீதிமன்றத்தில் கோயில் நிர்வாகம் தகவல்

கி.மகாராஜன்

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருக்கும் தூண், சமணர் காலத்தை சேர்ந்தது. அதேபோல் தூண்கள் மதுரையை சுற்றியுள்ள பல மலைகளில் உள்ளன. கார்த்திகை தீபம் ஏற்ற அந்த தூண்கள் பயன்படுத்தப்படவில்லை என உயர் நீதிமன்றத்தில் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு, அறநிலையத் துறை, கோயில் நிர்வாகம், தர்கா நிர்வாகம் உட்பட 26 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது அரசு, அறநிலையத் துறை சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த மேல்முறையீடு மனுக்கள் 2-வது நாளாக நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. கோயில் நிர்வாகம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஜோதி வாதிடுகையில், “திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றும் முழு உரிமை கோயில் நிர்வாகத்துக்கு தான் உள்ளது. அந்த உரிமையை தனி நபர் கோர முடியாது.

பல ஆண்டு காலமாக மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயிலில் தான் தீபம் ஏற்றப்படுகிறது. அந்த பழக்கத்தை மாற்ற மனுதாரர் கோரியுள்ளார். மலை மீது விளக்கேற்றுவது வேறு. வீட்டில் விளக்கேற்றுவது வேறு. மனுதாரர் கார்த்திகை தீபத்தை வீட்டில் தீபம் ஏற்றுவது போல நினைக்கிறார். நூறு ஆண்டுக்கு மேலாக திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் நடைமுறை ஆகம விதிகள் அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

கோயில் நிர்வாக விஷயங்களில் உயர் நீதிமன்றங்கள் நேரடியாக தலையிடக்கூடாது என உச்ச நீதிமன்றம் 2021-ல் கூறியுள்ளது. திருப்பதி தேவஸ்தானத்தில் கூட ஆகம விதிகளை மீறி எதையும் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆகம விதிகளை மீறி புதிய பழக்கங்களை நிறைவேற்றும் போது பலதரப்பையும் கருத்தில் கொள்ள வேண்டும். அரசு, அறநிலையத் துறை, கோயில் தரப்பு வாதங்களை தனி நீதிபதி ஏற்கவில்லை.

பொதுவாக அர்ச்சனை பூஜையில் எவ்வாறு தனிநபர் தலையீடு இருக்கக் கூடாதோ, அதுபோல மலை மீது தீபமேற்றுவதும் ஆகம விதிகள் சம்பந்தப்பட்டது. இதை தனி நபர் உரிமையாக கோர முடியாது. மதம் சார்ந்த விஷயங்கள் மிகவும் பரபரப்பானவை தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தக் கூடாது. கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்களை கோயில் மீது பற்று இல்லாதவர்கள் போல் தற்போது சித்தரித்து வருகின்றனர்.

தமிழ்நாடு தொல்லியல் ஆய்வுத் துறையின் புத்தகத்தில் மலையில் பாதி வழியில் இறங்கி சென்றால் தீபத்தூண் ஒன்று இருப்பதை காணலாம். அது நாயக்கர் கால தீபத்தூண். அந்த தீபத்தூணில் அனுமான் உருவம் உள்ளது. அது ஆண்டவன் தலைமீது உள்ள தூண் என மக்கள் நினைக்கின்றனர். அங்கு விளக்கேற்றினால் நன்மை நடக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. அந்த தூண் தான் உச்சிப்பிள்ளையார் கோயில் அருகேயுள்ள தீபத்தூண். இதைத் தவிர மலையில் உள்ள தூண்கள் தீபத்தூண் அல்ல.

தற்போது தீபம் ஏற்றும் தூணில் காலம் காலமாக தீபம் ஏற்றப்பட்டதற்கு பல்வேறு ஆதாரங்கள் உள்ளன. ஆனால் மனுதாரர் குறிப்பிடும் தூணில் தீபம் ஏற்றப்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

மதுரையின் பல மலைகளிலும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ளது போன்ற தூண்கள் உள்ளன. சரவணபவ கோயிலிலும் இதே போன்ற தூண் உள்ளது. இந்த தூண்கள் சமணர் காலத்தை சேர்ந்தவை. மதுரையை சுற்றியுள்ள பல மலைகளில் சமணர்கள் வாழ்ந்துள்ளனர். இதற்கான கல்வெட்டுகள், படுகைகள், எழுத்துக்கள், சிற்பங்கள் உள்ளன. சமணர்கள் மக்களை விட்டு விலகி மலை படுகைகளில் வாழ்ந்து வந்துள்ளனர். இரவில் அவர்கள் நிலா வெளிச்சத்தை தாண்டி வெளிச்சத்துக்கு இந்த தூண்களை பயன்படுத்தியிருக்கலாம்” என்றனர்.

அப்போது நீதிபதிகள், “சமணர்கள் பழமையானவர்கள். அவர்கள் விளக்கு ஏற்றத்தானே அந்தத் தூண்களை பயன்படுத்தி உள்ளார்கள். சில புத்தகங்களில் அது விளக்கேற்றும் தூண் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது” என்றனர்.

அதற்கு கோயில் தரப்பில், “அந்த தூண்கள் சமணர்கள் காலத்தை சேர்ந்தவை. இந்துக்களுக்கும் அந்த தூண்களுக்கும் சம்பந்தம் இல்லை. அந்த தூண்களில் கார்த்திகை தீபம் ஏற்றப்படவும் இல்லை. வைணவத்தில் வடகலை, தென்கலை பிரச்னை உள்ளது. அதுபோல திருப்பரங்குன்றத்தில் பிரச்சினை எழுப்பப்பட்டு வருகிறது. குன்றம் இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பது சரி. அதற்காக தூண் இருக்கும் இடமெல்லாம் தீபமேற்ற வேண்டுமென்றால் எப்படி?

உயர் நீதிமன்றத்துக்கு வெளியேயும் ஒரு தூண் உள்ளது. முருகனுக்கு இரு மனைவிகள் இருப்பதால், இரு இடங்களில் கார்த்திகை தீபம் ஏற்றலாமா? இரு இடங்களில் கார்த்திகை தீபம் ஏற்றுவது சரியல்ல. இந்த வழக்கால் தற்போது பல்வேறு பிரச்சினைகள் எழுந்து திருப்பரங்குன்றம் மக்கள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

இப்பிரச்சினைக்கு முழு காரணம் 3 மனுதாரர்கள் தான். தனி நீதிபதி மனுவை அவசர அவசரமாக விசாரித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த திடீர் உத்தரவால் அதிகாரிகள் பாதிக்கப்பட்டனர்” என்றார்.

சிக்கந்தர் தர்கா தரப்பு மூத்த வழக்கறிஞர் மோகன் வாதிடுகையில், “திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் இதற்கு முன் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை கருத்தில் கொள்ளாமல் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். தர்கா தரப்பை தனி நீதிபதி தாமாக முன்வந்து சேர்த்ததால் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

எங்களுக்கு போதுமான அவகாசம் தரவில்லை. எங்கள் தரப்பு வாதங்களை கேட்கவும் இல்லை. ரிட் மனு எப்படி விசாரிக்கப்பட வேண்டும் என விதிமுறைகள் உள்ளன. தர்காவிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு அப்பால் எங்கு வேண்டுமானாலும் தீபம் ஏற்றலாம் என்பதை ஏற்க முடியாது.

தர்காவில் ஆடு, கோழி பலியிட அனுமதி கோரப்பட்ட வழக்கில் உரிமையியல் நீதிமன்றத்தில் தீர்வு காண உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் மலை உச்சியில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தர்கா நிர்வாகம் மலையை ஆக்கிரமித்திருப்பதாக தனி நீதிபதி தெரிவித்துள்ளார். இது சொத்துரிமை தொடர்பான வழக்கு அல்ல” என்றார்.

அப்போது நீதிபதிகள், “தர்காவிலிருந்து 15 மீட்டர் தொலைவில் தீபம் ஏற்றலாமா?” எனக் கேள்வி எழுப்பினர். தர்கா தரப்பில், “இதுவரை முறையாக எல்லைகள் வரையறுக்கப்படவில்லை. திருப்பரங்குன்றம் மலை முழுவதும் அளவீடு செய்தால் மட்டுமே தனி நீதிபதி உத்தரவை அமல்படுத்த முடியும். தர்கா அருகே உள்ள கல்லத்தி மரம் அருகே கொடியேற்ற தர்கா நிர்வாகம் முடிவு செய்த போது கோயில் நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்தது. தொல்லியில் துறையிடம் தனி நீதிபதி கருத்து கேட்கவில்லை” என்றார்.

மூத்த வழக்கறிஞர் லஜபதிராய் வாதிடுகையில், “பாபர் மசூதி பிரச்சினையால் மத ரீதியான கொலைகள் நடந்தேறியது. இந்தச் சூழலில் இதுபோன்ற உத்தரவுகள் ஏற்புடையது அல்ல. உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல் நீதிபதி தீர்ப்பளிக்க வேண்டும்” என்றார்.

கோயில் நிர்வாகம், தர்கா தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், வக்ஃபு வாரியம், மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகர் காவல் ஆணையர் தரப்பில் வாதங்களை முன்வைப்பதற்காக விசாரணையை நாளைய தினத்துக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

முன்னதாக, திருப்பரங்குன்றம் மலை வரலாறு, கல்வெட்டு, சமணர் வரலாறு தொடர்பான புத்தகங்கள், மதுரை சுற்றியுள்ள மலைகளில் உள்ள கல் தூண்களின் புகைப்படங்களை நீதிபதிகளிடம் அறநிலையத் துறை சார்பில் வழங்கப்பட்டது.

SCROLL FOR NEXT