சென்னை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில், தமிழக முதல்வர் விஜய்யிடம் ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் விரிவான விளக்க அறிக்கை கோரியுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு அமல்படுத்தப்பட்டதா என்றும், அவ்வாறு நிறைவேற்றப்படவில்லை என்றால் அதற்கான காரணங்கள் குறித்து தமிழக முதல்வர் விஜய்யிடம் ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் விளக்கம் அளிக்குமாறு கோரியுள்ளார்.
முன்னதாக இன்று, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாதது குறித்துத் தமிழக அரசு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து முன்னணி அமைப்பினர் ஆளுநரிடம் மனு அளித்தனர்.
நடந்தது என்ன?
கார்த்திகை தீபத் திருநாளில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றப்படுவது வழக்கம். மலை உச்சியில் உள்ள தீபத்தூணிலும் தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்புகள் கடந்த பல ஆண்டுகளாக போராடி வருகின்றன.
கடந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருநாளில் தீபத்தூணில் தீபம் ஏற்ற உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது. ஆனால், அப்போது ஆட்சியராக இருந்த பிரவீன்குமார், உயர் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் வழக்கம்போல் உச்சிப்பிள்ளையார் கோயில் அருகில் மட்டுமே தீபம் ஏற்ற நடவடிக்கை எடுத்தார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரவீன்குமார் நீதிமன்றம் சென்று மன்னிப்புக் கேட்டார்.
இதனிடையே, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனு உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் விசாரணைக்கு வந்தபோது, நடப்பாண்டு மட்டும் தீபத்தூணில் தீபம் ஏற்றவும், இதற்கான பணிகளை ஆட்சியர் முன்னின்று மேற்கொள்ள வேண்டும் என இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த உத்தரவை நிறைவேற்றுவதற்காக மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவை பிறப்பித்து அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து வந்தது. ஆனால், கடைசி நேரத்தில் திடீர் திருப்பமாக ஆட்சியர் உத்தரவை மதிக்காமல் கோயில் அறங்காவலர் குழு தனித்தீர்மானம் நிறைவேற்றி ஆகம சான்றுகள், ஆவணங்கள் மற்றும் ஸ்தானிகர்களின் கருத்துகளின் அடிப்படையில் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் இடத்திலேயே தீபம் ஏற்றப்பட்டதாக அறிவிப்பு வெளியானது.
தீபத்தூணில் தீபம் ஏற்றாததால் அதிருப்தியடைந்த இந்து அமைப்பினர், பக்தர்கள் திருப்பரங்குன்றம் கோயில் முன் திரண்டு போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்கள், ஆட்சியரும், தவெக அதிகார மையங்களும் இணைந்தே திரைமறைவு நடவடிக்கைகளை மேற்கொண்டு தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை எனக் குற்றம் சாட்டினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று போலீஸார் கைது செய்தனர்.
இதனிடையே, தீபத்தூணில் ஏன் தீபம் ஏற்ற முடியாமல் போனது என்பதற்கான காரணங்களை விளக்கி 17 பக்க அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா தற்போது தாக்கல் செய்துள்ளார். அதில், தீபத் தூணில் தீபம் ஏற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் தீபம் ஏற்ற கோயில் தரப்பிலிருந்து ஆட்கள் வரவில்லை என விளக்கம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.