திருப்பரங்குன்றத்தில் சுவாமிநாதன் பட்டர் வீட்டிலிருந்து வெளியே வந்த கோயில் துணை ஆணையர் ஜி.செல்வி. (அடுத்த படம்) திருப்பரங்குன்றத்தில் ஸ்தானீக பட்டர்களிடம் மிரட்டி கையெழுத்து பெறுவதாகக் கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திரண்ட இந்து அமைப்பினர். படங்கள்: நா.தங்கரத்தினம்.
மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயில் அறங்காவலர் குழு தீர்மானத்தின்படி உச்சிப்பிள்ளையார் கோயில் முன்பு கார்த்திகை தீபம் ஏற்றியதாக உச்ச நீதிமன்றத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில் தெரிவித்திருந்த நிலையில், அந்த தீர்மானத்தில் கோயில் ஸ்தானீக பட்டர்களை மிரட்டி, முறைகேடாக தீர்மானத்தில் கையெழுத்து பெறுவதாக பட்டர் வீட்டு முன்பு சென்று கிராமத்தினர் வாக்குவாதம் செய்தனர். இதில் 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் நேற்று முன்தினம் நடந்த திருக்கார்த்திகை தீபத் திருவிழாவில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அரசு மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றாமல், அறங்காவலர் குழு தீர்மானத்தின்படி வழக்கம்போல் உச்சிப்பிள்ளையார் கோயில் முன்பு தீபம் ஏற்றப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் மாவட்ட ஆட்சியர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அறங்காவலர் குழு தீர்மானத்தில் கோயில் ஸ்தானீக பட்டர்களிடம் இதுவரை கையெழுத்து பெறவில்லை எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில் நேற்று கோயிலுக்கு முன்புள்ள கோயில் முதல் ஸ்தானீக பட்டர் சுவாமிநாதன் வீட்டில் கோயில் துணை ஆணையர் ஜி.செல்வி, அறங்காவலர் குழுத் தலைவர் சண்முகசுந்தரம் மற்றும் அறங்காவலர்கள், கோயில் கண்காணிப்பாளர் ரஞ்சனி, இளநிலை உதவியாரளர் மணிமாறன் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஸ்தானீக பட்டர்களிடம் கையெழுத்து பெற வந்துள்ளதாக தகவல் பரவியது.
தகவலறிந்து நேற்று மாலையில் அவரது வீடு முன்பு கூடிய கிராம பொதுமக்கள், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது முறைகேடாக ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றிய ஆவணங்களில் கையெழுத்து வாங்குவது தவறு எனக் கூறி வாக்குவாதம் செய்தனர்.
இத்தகவலறிந்த காவல் துணை ஆணையர் இனிகோ திவ்யன் தலைமையிலான போலீஸார் பட்டர் வீட்டு முன்பு வாக்குவாதம் செய்த ராமலிங்கம், சரவணகுமார், வெற்றிவேல், முருகன் ராஜேஸ்வரன், அருண் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். பின்பு சுமார் 7 மணியளவில் சுவாமிநாத பட்டர் வீட்டிலிருந்து கோயில் துணை ஆணையர் ஜி.செல்வி, கண்காணிப்பாளர் ரஞ்சனி, இளநிலை உதவியாளர் மணிமாறன் ஆகியோர் வெளியேறி கோயில் வாகனத்தில் புறப்பட்டுச் சென்றனர்.
எங்களிடம் எந்த கருத்தும் கேட்கவில்லை: ஸ்தானீக பட்டர்கள் வேதனை கடிதம்
திருப்பரங்குன்றம் கோயில் ஸ்தானீக பட்டர்கள் சுவாமிநாத பட்டர், பாலசுப்பிரமணி பட்டர், சொக்கு சுப்பிரமணிய பட்டர், சண்முக சுந்தரம் பட்டர் ஆகியோர் நவ.24-ம் தேதி அளித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: திருப்பரங்குன்றம் சுப்பிரமண்ய சுவாமி கோயில் நிர்வாக அதிகாரி / துணை ஆணையர் மற்றும் அறங்காவலர் குழுத் தலைவர் மற்றும் அறங்காவலர்களுக்கு இத்திருக்கோயில் ஸ்தானீக பட்டர்கள் எழுதிக் கொண்டது.
இப்பவும் இன்று நடந்து முடிந்த 2026 திருக்கார்த்திகை தீபத்தன்று அனைத்து ஊடகங்களின் வாயிலாக ஓர் கடிதத்தை நமது திருக்கோவில் அறங்காவலர் குழு தீர்மானத்தின்படி வெளியிடப்பட்டது என்பதை அறிந்தோம்.
இத்திருக்கோவிலில் நடந்த கார்த்திகை தீபம் ஏற்றுவது சம்பந்தமாக நாங்கள் எந்த ஒரு கடிதமும் திருக்கோவிலுக்கு வழங்கவில்லை மற்றும் உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றுவது சம்பந்தமாக கடந்த ஆண்டு தபால் அளித்துள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மலைமேல் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது சம்பந்தமாக நாங்கள் எந்த ஒரு கருத்தும் கூறவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தாங்கள் ஊடகங்களுக்கு அளித்த கடிதத்தில் எங்களை கலக்காமல் எங்களது பெயர்களையும் சேர்த்து வெளியிட்டது எங்களுக்கு மிகவும் மனவேதனையை தருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். என்று ஸ்தானீக பட்டர்கள் குறிப்பிட்டுள்ளனர்.