சென்னை: போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த போதைப்பொருள் ஒழிப்பு அதிரடிப் படையை உருவாக்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் விஜய்யை விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: விசிக சார்பில் நடைபெற்ற தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டுக்கு முதல்வர் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார்.
அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் ஆட்சி அமைத்து 100 நாட்கள் வெற்றிகரமாக கடந்திருப்பதற்கு வாழ்த்து தெரிவித்து, இந்த ஆட்சி ஐந்தாண்டு காலமும் தொடர்வதற்கு எங்கள் ஆதரவு உண்டு என்பதை உறுதிப்படுத்துவதற்கும், முதல்வரை சந்தித்து பேசினோம்.
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அனைத்து நிகழ்ச்சிகளிலும் முதலிடம் அளிப்பதை உறுதிப்படுத்தும் தீர்மானம், மக்களவை தொகுதி வரையறைக்கு எதிரான தீர்மானம் ஆகியவற்றுக்கு பாராட்டு தெரிவித்தோம்.
முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி காலத்தில் மாநில சுயாட்சி கோரிக்கை வலுவாக பேசப்பட்டது. நீங்களும் அதே வழியில் மாநில சுயாட்சிக்கான குரலை ஓங்கி ஒலிக்க வலியுறுத்தினோம்.
அமுதன் படுகொலையின் பின்னணியில் போதைப்பொருள் புழக்கம் இருப்பதாக அமுதனின் பெற்றோர் உள்ளிட்ட பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அந்த வழக்கை சிறப்பு புலனாய்வுக்குழு விசாரிக்க வேண்டும்.
போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த போதைப்பொருள் ஒழிப்பு அதிரடிப் படை ஒன்றை உருவாக்கிட வேண்டும், அதற்கு முதல்வரின் கூடுதல் கவனம் தேவை.
தவெக உடன் இணைந்து 100 நாட்கள் தான் ஆகிறது. கூட்டணி அரசில் அங்கம் வகிப்பதன் மூலம் நாங்களும் ஒரு ஆளும் கட்சி என்ற அடையாளத்தை பெற்றுள்ளோம். இந்த வளர்ச்சியை தமிழக மக்கள் வழங்கிஉள்ளனர். அவர்கள் விருப்பப்படி எங்கள் அரசியல் நிலைப்பாடு இருக்கும் என்றார்.