நாங்குநேரியில் திருமாவளவன்
திருநெல்வேலி: “தமிழகத்தில் தேர்தல் நெருங்கியுள்ள நேரத்தில் நாங்குநேரியில் நடைபெற்ற இரட்டைக் கொலை சம்பவத்தில் ஏதேனும் அரசியல் காரணங்கள் பின்புலமாக இருக்கிறதா என்பதை கண்டறிய வேண்டும்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே பெரும்பத்து பகுதியில் இரட்டைக் கொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினரை திருமாவளவன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது ரூ.2.5 லட்சம் நிதியுதவியை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “நாங்குநேரியில் நடைபெற்ற சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணி விளங்கவில்லை. எந்த முன்விரோதமும் இல்லாத நிலையில் இரு அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
தென்மாவட்டங்களில் போதை பொருட்கள் பழக்கம் அதிகரித்துள்ளதாக கூறப்படும் நிலையில், போதை பழக்கத்துக்கு ஆளானவர்களால் கொலை நடைபெற்றதா, அல்லது ஏதேனும் அரசியல் காரணங்கள் இருக்கின்றனவா, தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுக அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கம் இருக்கிறதா என்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இதை விசாரித்து கண்டறிய வேண்டும்.
இந்தப் பகுதியில் சில வாரங்களுக்குமுன் நாட்டு வெடிகுண்டு வீசி வன்முறை நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதிலும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. கொலை செய்யப்பட்ட மாற்றுத் திறனாளி ஜானின் மனைவி வாய்பேச முடியாதவர். அவருக்கு சிறுவயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். எனவே, ஜான் குடும்பத்தினருக்கு போதிய நிதியுதவியை வழங்க வேண்டும். அரசு வேலைவாய்ப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பேசினோம். கலைஞர் கனவு இல்லம் கட்ட உதவுவோம் என்றும், அரசு வேலை வழங்குவது குறித்து பரிசீலிப்பதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதுபோல் கொலை செய்யப்பட்ட ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவரின் குடும்பத்துக்கு நிதியுதவியும், கலைஞர் கனவு இல்லம் கட்ட உதவுவதற்கு பரிசீலிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தக் கொலை சம்பவத்தில் அரசியல் பின்புறம் இருக்கிறதா என்பதை கண்டறிய வேண்டும். போதை பொருட்களில் இருந்து மக்களை பாதுகாக்க காவல் துறையும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்களையும் கைது செய்ய வேண்டும்” என்று திருமாவளவன் தெரிவித்தார்.