சென்னை: “ஆளூர் ஷாநவாஸை தவிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் எடுக்கப்பட்ட முடிவு இல்லை. அப்துல் ரகுமானுக்கு ஒரு வாய்ப்பு தர வேண்டும் என்ற எண்ணத்தில் கொடுக்கப்பட்டது,” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் விசிக எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸிற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு பல்வேறு விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் எழுந்த நிலையில், அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “ஒருவேளை நாகை மீண்டும் எங்களுக்கு கிடைத்திருந்தால் அதை ஆளூர் ஷாநவாஸுக்கே கொடுத்திருப்பேன். நான் மாற்று சிந்தனைக்கு போயிருக்க வாய்ப்பில்லை. ஆனால் அது ஜவாஹிருல்லாவுக்கு சென்றுவிட்டது.
ஆளூர் ஷாநவாஸ் நாகையில் போட்டியிட விரும்பவில்லை. இது குறித்து விசாரித்ததில் அவர் ராயபுரத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்ததாகச் சொன்னார்கள். அதற்குப் பிறகு பல்லாவரம் வேண்டும் என்று கேட்டார். ஆனால் அது தேமுதிகவிற்கு சென்றுவிட்டது. முதல்வரே தலையிட்டு தொகுதிப் பங்கீட்டை விரைந்து முடிக்க வலியுறுத்தினார். அவசர கதியில் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அரூர் கேட்டோம் அரக்கோணம் தந்தார்கள். பல்லாவரம் கேட்டோம் பண்ருட்டி தந்தார்கள்.
எனவே, ஆளூர் ஷாநவாஸை தவிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் எடுக்கப்பட்ட முடிவு இல்லை. அப்துல் ரகுமானுக்கு ஒரு வாய்ப்பு தர வேண்டும் என்ற எண்ணத்தில் கொடுக்கப்பட்டது. இதில் எந்த உள்நோக்கமும் இல்லை” என அவர் பேசியுள்ளார்.
இதனிடையே, இது குறித்து ஆளூர் ஷாநவாஸு தனது சமூகவலை தளப்பக்கத்தில் பக்கத்தில், “2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில், விசிக சார்பில் போட்டியிட எமக்கு மீண்டும் வாய்ப்பு அமையவில்லை என்பதை வைத்து வலைதளங்களில் பல்வேறு கருத்துக்களில் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருப்பதை அறிகிறேன்.
இதில் என் மேல் அன்பு கொண்டு எனக்கு ஆதரவாக கருத்துப் பரிமாறிய அனைத்துத் தோழர்களுக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன். அதே நேரத்தில், ஒரு கட்சியில் யாருக்கு எப்போது எப்படி வாய்ப்பளிக்க வேண்டும் என்பது அந்தக் கட்சியின் தலைமை எடுக்கும் முடிவாகும்.
அம்முடிவு எதுவாயினும் அதை ஏற்றுக் கொள்வதே சிறந்த அறமாகும்.அந்த வகையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட 8 வேட்பாளர்களும் வெற்றி பெற்று சட்டப்பேரவையில் விசிகவின் குரல் வலுவாக ஒலிப்பதற்கும், நமது கூட்டணி சார்பில் களம் காணும் அனைவரும் வெல்வதற்கும், திமுக தலைமையிலான நல்லாட்சி மீண்டும் அமைவதற்கும் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடுவோம்.
எனது பொது வாழ்க்கையில் நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்து பணியாற்றியதை விட, இன்னும் வீரியத்துடன் தொடர்ந்து அரசியல் களத்தில் பணியாற்றுவேன் என்பதையும் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.