திருமாவளவன்

 
தமிழகம்

“இஸ்லாமியர்கள் குறித்த எதிர் உணர்வுகளை இந்துக்களிடையே தூண்டிவிட முயற்சி” - திருமாவளவன் குற்றச்சாட்டு!

என்.சன்னாசி

மதுரை: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இஸ்லாமியர்கள் குறித்த எதிர் உணர்வுகளை இந்துக்களிடையே தூண்டிவிட முயற்சிப்பதாக தொல். திருமாவளவன் எம்பி குற்றம்சாட்டினார்.

மதுரை ஒத்தக்கடையில் நடந்த திருமண விழா ஒன்றில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்பி பங்கேற்று, மணமக்களை வாழத்திப் பேசினார்.

அவர் பேசியதாவது: சாதி மறுப்பது, மறுமணம் செய்வது 50 ஆண்டுக்கு முன்பு கடினமான செயலாக இருந்தது. இன்றைக்கு பொது வெளியில் ஊர் அறிய சாதி மறுப்பு திருமணங்கள் நடப்பது சமூகச் சூழலில் நெகிழ்வுத்தன்மையை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், சாதி மறுப்பு திருமணம் குறித்த சுவரொட்டிகளை கூட ஒட்ட காவல்துறை அனுமதி மறுக்கிறது. இன்னும் இது போன்ற திருமணங்களுக்கு எதிர்ப்பு, மறுதலிப்புகளும் உள்ளன.

சமூக, சாதிய மரபுகள், சனாதன மரபு என்ற பண்பாட்டு தளத்தில் நாம் ஏற்படுத்தும் தாக்கம் தான் புரட்சிக்கான புள்ளி. நீ , நீயாகவே இரு, நான் நானாகவே இருக்கிறேன் என்ற  நிலை காலங்காலமாக தொடர்கிறது. இந்நிலையை மீறுவது தான் காதல். இதனை உடைக்கும் சக்தி காதலுக்கு உள்ளது.

காதல் சாதிக்குள்ளேயே நிகழவேண்டும். சாதி மாறி வரக்கூடாது என்ற நிலை இருந்தது. மதுரை வீரன் கதையும் அப்படித்தான். காதல் செய்ததால் மதுரைவீரன் கொல்லப்பட்டான். இதில், முருகன் மட்டும் தப்பித்து விட்டார். அவரை ஏன் ஆணவக்கொலை செய்யவில்லை எனத் தெரியவில்லை. வேட்டுவ குறவர் சமூகத்தை சார்ந்த வள்ளியை சாதி மறுப்பு திருமணத்தை செய்தவர் முருகன். சனாதன மறுப்பு திருமணம் செய்தவர் முருகன்.

சாதி மறுப்பு திருமணம் நடக்க திருமாவளவன் தான் காரணம் எனப் பேசுகின்றனர். ‘லவ் ஜிகாத்’ என வெறுப்பு அரசியலை பரப்ப இதை ஒரு உத்தியாகவே சனாதவாதிகள் பரப்புகின்றனர். இதன் காரணமாகத்தான் திருமாவளவன் மீது வெறுப்பை விதைக்கும் வகையில் கண்ணாடி அணிந்து கொண்டு உடையை மாற்றிக்கொண்டு இந்துப் பெண்களை திருமணம் செய்கின்றனர் என தலித்துக்கு எதிரான வெறுப்புகளை பரப்புகின்றனர்.

திருப்பரங்குன்றம் விவகாரம் திட்டமிட்ட ஒன்று. பல ஆண்டுகளாக திட்டமிட்டு வன்முறையை உருவாக்குகின்றனர். மதத்தின் பெயரால் வன்முறை நடக்க வாய்ப்புள்ளது. இந்துக்களிடையே இஸ்லாமியர் குறித்த எதிர் உணர்வுகளை ஏற்படுத்தி பிரச்சினையை தூண்டிவிட முயல்கின்றனர். அது நடக்கவில்லை என்பதால் சாதிப்பெருமை பேச வைக்கின்றனர். இதை ஒரு வேலைத் திட்டமாகவே இந்து சனாதன அமைப்புகள் பார்க்கின்றனர்.

சனாதன சக்திகள் தமிழ்நாட்டில் வேர்பிடிக்க அதிமுக உள்ளிட்ட கட்சிகளை பிடித்துள்ளன. தேர்தல் வரும் போகும். ஆனால் வலதுசாரிகளை வீழ்த்த வேண்டும். இடதுசாரி அரசியல் வெற்றி பெறவேண்டும். வலதுசாரி அரசியலுக்கு தமிழகத்தில் இடமில்லை என, அவர்கள் பின்னங்கால்கள் பிடரியில் அடிக்க ஓட விரட்டவேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 

SCROLL FOR NEXT