திருமாவளவன் எம்.பி
சென்னை: “தமிழகத்தில் பாஜக இவ்வளவு ஆட்டம்போடக் காரணமே அதிமுகதான். இது மிகப்பெரிய தமிழினத் துரோகம். பாஜக தமிழகத்தில் வலுப்பெற்றுவிட்டால் அதிமுக இல்லாமல் போய்விடும்.” என விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தமிழகத்தில் பாஜக இவ்வளவு ஆட்டம்போட காரணமே அதிமுகதான். இது மிகப்பெரிய தமிழினத் துரோகம். பாஜக வளர அதிமுக இடம் கொடுத்திருக்கிறது. மீண்டும் அவர்களை தூக்கி தோளில் வைத்து சுமக்கிறார்கள். பாஜக தமிழகத்தில் வலுப்பெற்றுவிட்டால் அதிமுக இல்லாமல் போய்விடும், பெரியார் அரசியலும் இல்லாமல் போய்விடும். இங்கு கிறிஸ்தவர்களோ, இஸ்லாமியர்களோ சுதந்திரமாக நடமாட முடியாது, ஏன் சாதாரண இந்துக்கள்கூட நடமாட முடியாது.
பொது சிவில் சட்டம், பாபர் மசூதி இடிப்பு, ஜம்மு காஷ்மீர் பிரச்சினை ஆகியவை குறித்து, அதாவது மதவாத அரசியலே பேசக்கூடாது என நிபந்தனை விதித்த பிறகுதான், கருணாநிதி பாஜகவுடன் கூட்டணி வைத்தார். தேர்தல் கூட்டணி என்பது வேறு. அதிமுக இப்போது செய்வது வேறு.
பாஜகவுடன் நட்பில் இருந்த கருணாநிதிதான்; பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்தார். ஓட்டுக்காக கூட்டணி வைத்த அதே நேரத்தில் கருத்தியலில் உறுதியாக இருந்தது திமுக.
ஆனால் அதிமுக கருத்தியல் அடிமையாக மாறி இருக்கிறது. ஆர்எஸ்எஸ், பாஜகவின் அரசியலையே, அதிமுகவும் பேசுகிறது. இது தமிழகத்துக்கு உகந்தது அல்ல. அவர்கள், திமுகவுக்கு எதிராக அல்ல, நாமெல்லாம் பேசக்கூடிய அரசியலுக்கு எதிராக பேசுகிறார்கள்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.