சென்னை: “நாங்கள் ஏற்கெனவே ஆர்டர் செய்த சோஃபா தான் அலுவலகத்துக்கு வந்தது. விசிக அலுவலகத்துக்கு சோபா வந்ததை குறிப்பிட்டு உதயநிதி ஸ்டாலின் கூறவில்லை” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது “மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடரும் என சொல்லியிருப்பது மகிழ்ச்சியானது. அதை வரவு வைக்க வேண்டிய நாள் சற்று தள்ளிப் போவதாக கூறினாலும், விரைவில் அனைவருக்கும் வரவு வைக்கப்படும் என சொல்வது வரவேற்கத்தக்கது.
நாங்கள் ஏற்கெனவே ஆர்டர் செய்த சோஃபா தான் அலுவலகத்துக்கு வந்தது. விசிக அலுவலகத்துக்கு சோஃபா வந்ததை குறிப்பிட்டு உதயநிதி ஸ்டாலின் கூறவில்லை. அதிமுகவில் உருவாகியிருக்கும் ஓர் அணியின் தலைவரை, சட்டமன்ற உறுப்பினர்களை சந்திக்க முதல்வர் சென்றதை உதயநிதி சுட்டிக்காட்டியிருக்கிறார் என்று கருதுகிறேன். இது தற்செயலாக நடந்தது. விஜய்யின் வருகைக்காக சோஃபா ஆர்டர் செய்யப்படவில்லை. தவறான தகவலை பரப்ப வேண்டாம்.
முதல்வர் பதவிக்காக நான் காத்திருக்கவில்லை. நான் முடிவை அறிவிக்க காலம் தாழ்த்தியது அதற்காகதான் என்று அவதூறுகளை வாரி இறைக்கிறார்கள். இடதுசாரிகளின் முடிவுக்காகவே காத்திருந்தேன். என்னை சுற்றி என்ன நடந்தது என எனக்கு பெரிதாக தெரியவில்லை. ஊடகங்கள் செய்தியை திரித்து பரப்புகிறார்கள்” என்றார் திருமாவளவன்.