திருமாவளவன்
சென்னை: “செங்கோட்டையனின் செயல்பாடுகளுக்குப் பின்னால் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் கைகளும் நீண்டிருக்கிறதோ என்ற கேள்வியும் எழுகிறது” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறும்போது, “அதிமுகவின் மூத்த தலைவராக இருந்தவர் செங்கோட்டையன். அவருக்கு நெடிய அனுபவம் உள்ளது. அவர் வெளியேறும் நிலை ஏற்பட்டிருப்பது அதிமுகவுக்கும், எடப்பாடிக்கும் பின்னடைவாகத்தான் இருக்கும். தனிப்பட்ட முறையில், தன்னிச்சையாக அவர் இந்த முடிவை எடுத்திருந்தால், நாம் எதுவும் சொல்ல முடியாது.
செங்கோட்டையனின் செயல்பாடுகளுக்குப் பின்னால் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் கைகளும் நீண்டிருக்கிறதோ என்ற கேள்வியும் எழுகிறது. தன்னை பாஜக அழைத்து பேசியதாக செங்கோட்டையன் ஏற்கெனவே ஒருமுறை ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருந்தார்.
அதிமுகவை பலவீனப்படுத்துவதை ஒரு செயல்திட்டமாக கொண்டு, பாஜக செயல்பட்டு வருகிறது. இது அதிமுகவுக்கும், தமிழக அரசியலுக்கும் நல்லதல்ல. இது குறித்து நான் தொடர்ந்து பேசிவருகிறேன். அதிமுக தலைமை இது குறித்து தீவிரமாக சிந்திக்கும் என நம்புகிறேன்.
ஆளுநர் திரும்பத் திரும்ப தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராகவும், திராவிட அரசியலுக்கு எதிராகவும் பேசிவருகிறார். அரசியல் முரண்பாடுகளை வளர்த்து வருகிறார்.
அவரை திரும்பப் பெறவேண்டும் என ஒன்றிய அரசுக்கு பலமுறை வலியுறுத்தி இருக்கிறோம். ஆனால் அவரை பயன்படுத்தி, ஒன்றிய ஆட்சியாளர்கள் தமிழக அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்துவது கவலையளிக்கிறது. ஆளுநரின் கருத்தை முதல்வர் கண்டித்துள்ளதை வரவேற்கிறோம்” என்று அவர் கூறினார்.