திருமாவளவன்
திருச்சி: “பாஜக - ஆர்எஸ்எஸ் செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்களாக முகமுடி அணிந்து விஜய்யும், சீமானும் வந்துள்ளார்கள்” என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறினார்.
திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “எதிர்க்கட்சிகள் கூட்டணியாக உருவாக முடியாத அளவுக்கு சிதறி கிடக்கிறார்கள். ஒருமித்த கருத்து அவர்களுக்குள் ஏற்படவில்லை. கூட்டணியாக உருவாகாத நிலையில், திமுக கூட்டணியை வீழ்த்துவோம் என அன்புமணி ராமதாஸ் கூறுவது நகைப்புக்குரியது. பாமகவின் ஓர் அணி திமுக கூட்டணிக்கு வரும் என கூறுவது வெறும் யூகம் தான். அதற்கு நான் பதிலளிக்க முடியாது.
தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை அலட்சியப்படுத்தாமல் பரிசீலித்து அதை நிறைவேற்ற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல ஆசிரியர்கள் - அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திமுகவுக்கு விசிக பரிந்து பேசுவதாக சிலர் விமர்சனம் வைத்ததால், கொள்கைதான் எங்களுக்கு முதன்மையானது; கூட்டணி இரண்டாம்பட்சம் தான் என்பதைதான் நான் கூறினேன். தமிழ்நாட்டில் பாஜக - ஆர்எஸ்எஸ் சக்திகள் வளர அதிமுக உதவுகிறது. சிலர் அதற்கு துணை போகிறார்கள். அவர்கள் மதவெறியர்களை காலூன்று வைக்கப் போகிறார்கள். மற்ற மாநிலங்களில் நடந்த அவலம் தமிழ்நாட்டிலும் நடக்கும் காலம் இனி வெகு தூரத்தில் இல்லை.
நான் பெரியார் - அம்பேத்கரின் பிள்ளை. சனாதான சக்திகளுக்கு துணை போகும் வகையில் சீமானும், விஜய்யும் செயல்படுகிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர்களின் செயல்பாடுகள் பாஜகவுக்கு ஆதரவாக உள்ளது. இதனை தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் தேசியம் பேசுவது போல் சீமானும், பெரியார் குறித்து பேசுவது போல் விஜய்யும் நாடகமாடுகிறார்கள்.
கொள்கை எதிரியான பாஜகவை விஜய் விமர்சிக்கவில்லை, கண்டிக்கவில்லை. பெரியார் அரசியல் என்பது பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான அரசியல், விளிம்புநிலை மக்களுக்கான அரசியல். அதை தகர்ப்பேன் என்று சீமான் கூறுவது இவரே ஆர்எஸ்எஸின் கடப்பாரையாக மாறியுள்ளார் என்பதை தான் காட்டுகிறது. அவர் பேசுவது தமிழ் தேசிய அரசியல் அல்ல, சனாதன அரசியல். பிராமண கடப்பாரையை கொண்டு திராவிடத்தை தகர்ப்பேன் எனக் கூறுவது திமுகவுக்கு எதிரான அரசியல் அல்ல, நாம் எல்லோரும் பேசும் அரசியலுக்கு எதிரானது.
பெரியார்- அம்பேத்கர் - இடதுசாரி அரசியலுக்கு எதிரானது. பாஜக - ஆர்எஸ்எஸ் செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்களாக முகமுடி அணிந்து விஜய்யும் சீமானும் வந்துள்ளார்கள். தமிழ்நாட்டில் பாஜக இந்தளவிற்கு ஆட்டம் போட காரணமே அதிமுக தான். பாஜகவுடன் கூட்டணி வைத்தது அதிமுக செய்த மிகப் பெரிய தமிழ் இன துரோகம்.
பாஜக இங்கு வலுப்பெற்றால் அதிமுக இல்லாமல் போய்விடும். பாஜக உடன் கூட்டணி வைத்திருந்தபோது மதவாத அரசியலை பேசக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்துதான் கருணாநிதி கூட்டணி வைத்தார். பாஜக உடன் கூட்டணி வைத்திருந்த போதுதான் ராமர் எந்த கல்லூரியில் இன்ஜினியரிங் படித்தார் என்று கேட்டார்.
கூட்டணி வைத்திருந்த போதும் தனது கருத்தியலில் உறுதியாக இருந்தார். ஆனால் தற்போது பா.ஜ.க உடன் கூட்டணி வைத்துள்ள அதிமுகவினர் பாஜகவின் கருத்தியல் அடிமையாகி விட்டார்கள். பாஜகவின் அரசியலை அதிமுகவினர் பேசுகிறார்கள். இது தமிழ்நாட்டிற்கு உகந்தது அல்ல” என்று அவர் கூறினார்.