திருமாவளவன் | கோப்புப் படம்
தே.ஜ. கூட்டணியில் சேர விஜய் இணங்க மாட்டார். தனது அரசியல் எதிர்காலத்தை சூனியமாக்கிக் கொள்ள மாட்டார் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விசிக தலைவர் திருமாவளவன் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜக, விஜய்யை தங்கள் கூட்டணியில் இணைக்க முயற்சிப்பதாக செய்திகள் வருகின்றன. விஜய்க்கு அழுத்தம் கொடுத்து அடிபணிய வைக்க முயற்சிகள் நடப்பதாக செய்திகள் வருகின்றன. நண்பர் விஜய் பாஜகவுக்கு அடிபணிந்தால் அவருடைய அரசியல் எதிர்காலம் சூனியமாகிவிடும்.
அது அவருக்கும் தெரியும், பிற மாநிலங்களில் பாஜக, சங் பரிவார் நயவஞ்சகமாக கூட்டணி கட்சிகளை வளைப்பது, போன்ற யுக்தியை கையாள்வர். அதை தமிழகத்திலும் செய்ய பார்க்கின்றனர். நண்பர் விஜய் அதற்கு இணங்க மாட்டார். தனது எதிர்காலத்தை சூனியமாக்கி கொள்ள மாட்டார் என நான் நம்புகிறேன்.
இடதுசாரிகள் கூடுதல் தொகுதிகள் கேட்பதாக கூறுகிறீர்கள், கூட்டணி பேச்சுவார்த்தையின்போது கூட்டணி கட்சிகள் இடையே மாறுபட்ட, முரண்பட்ட கருத்துகள் வருவது இயல்புதான். ஆனாலும் இறுதியில் சுமூக தீர்வு காண்போம். இந்த கருத்துக்களால் கூட்டணியில் எந்த பாதிப்பும் ஏற்படாது. விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என இரண்டொரு நாளில் தெரிந்து விடும்.இவ்வாறு அவர் கூறினார்.