விழுப்புரம்: கடந்த கால திட்டங்கள் எதையுமே தவெக அரசு நிறுத்தவில்லை. பெயர் மாற்றம் என்பது வாடிக்கையான ஒன்றுதான் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் இன்று (ஆக.7) செய்தியாளர்களிடம் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியதாவது: நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை மசோதாவை, இந்த கூட்டத் தொடரில் பாஜக அரசு அறிமுகப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. நடந்து முடிந்த இரண்டு வார கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தவில்லை. இது தொடர்பாக சிறப்பு கூட்டம் நடத்த வாய்ப்பு இருக்கிறது.
இந்நிலையில் தமிழக முதல்வர் விஜய், தமிழகத்தின் நாடாளுமன்ற மற்றும் மாநிலங்கவை உறுப்பினர்களை ஒருங்கிணைத்து கலந்தாய்வு கூட்டம் நடத்த முன் வந்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. நாளை (ஆக.8) மாலை 3 மணி அளவில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் விசிக சார்பில் நானும், ரவிக்குமாரும் பங்கேற்க இருக்கிறோம்.
கட்சி மரபுகளை தாண்டி அனைத்து தரப்பினரும், அனைத்து கட்சியினரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய காலம் இது. தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் எதிர்கட்சிகள் ஒன்றுப்பட்டு நின்றதன் விளைவாக முயற்சி முறியடிக்கப்பட்டது. மீண்டும் முறியடிக்க வேண்டிய தேவை உள்ளது. எனவே, நாளை நடைபெற உள்ள கலந்தாய்வு கூட்டத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளை சேர்ந்த மக்களவை, மாநிலங்கவை உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.
தண்ணீரின்றி காய்ந்து போன 2 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பது நியாயமான கோரிக்கை. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை விவசாயிகள் நடத்தி வருகின்றனர். போராடும் விவசாயிகள், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் குரலைதான், அனைத்து கட்சியினரும் எதிரோலிக்கும் நிலை உள்ளது. இக்கோரிக்கையை முதல்வர் விஜய் பரிசீலிக்க வேண்டும்.
தமிழகத்தில் கடுமையான நிதி நெருக்கடி உள்ளதை நாம் அறிவோம். மத்திய அரசும் வஞ்சகம் செய்து வருகிறது. திமுக, அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை, அப்படியே நடைமுறைப்படுத்த தவெக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறது. இந்த முயற்சியை விசிக பாராட்டுகிறது.
தவெக அரசு ஆட்சிக்கு வந்து இரு மாதங்கள்தான் ஆகிறது. பொருளாதார நெருக்கடி ஒருபுறம் உள்ளது. இந்த நெருக்கடி நிலையை சமாளிக்க வேண்டிய பொறுப்பு, சவால் ஆகியவை அரசுக்கு உள்ளது.
இந்த சூழ்நிலையில் கடந்தகால திட்டங்களை எதையுமே நிறுத்தவில்லை. பெயர் மாற்றம் என்பது வாடிக்கையான ஒன்றுதான். திட்டங்களை முழுமையாக செயல்படுத்துவதை பாராட்டுகிறோம். உளுந்தூர்பேட்டையில் வரும் 17-ம் தேதி நடைபெற உள்ள மாநாட்டுக்கு அரசியல் கட்சிகள் யாரையும் அழைக்கவில்லை” இவ்வாறு திருமாவளவன் கூறினார்.