விசிக தலைவர் திருமாவளவன்

 
தமிழகம்

“நான் தடுமாறுவதாக கூறி விசிகவை உளவியலாக பலவீனப்படுத்த முயற்சி” - திருமாவளவன் ஆவேசம்

வெற்றி மயிலோன்

சென்னை: “திருமாவளவன் தடுமாறுகிறார் என உளவியலாக நம்மை பலவீனப்படுத்த பார்க்கிறார்கள். விசிகவும், திருமாவளவனும் குறிவைக்கப்படுவது உள்நோக்கம் கொண்ட செயல். தமிழக அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக விசிக இருக்கிறது என்பதால் இப்படி செய்கிறார்கள்” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், “தமிழகத்தில் இரண்டு அணிகளாக பிரிந்து தேர்தலை எதிர்கொள்வதே அரசியல் கலாச்சாரமாக இருந்தது. மூன்றாவதாக ஓர் அணி தோன்றினாலும் அதற்கு வலு கிடைக்கவில்லை. அதனால் மும்முனைப் போட்டி என்ற சூழல் உருவாகாமல், திமுக - அதிமுக என இருமுனைப் போட்டியே இங்கு நிலவியது. தமிழகத்தில் வைகோ, விஜயகாந்த், ராமதாஸ், சீமான், விஜய் என மூன்றாவது அணி தொடர்ந்து இருந்து வந்தது.

தமிழகத்தில் இரு துருவ அரசியல் வலிமையாக இருப்பதால் தேசிய கட்சிகளால் இங்கே வலிமை பெற முடியவில்லை. அதேபோல வைகோ, விஜயகாந்த், ராமதாஸ், சீமான் போன்றோராலும் வெல்ல முடியவில்லை. இப்போது விஜய் 35 சதவீத வாக்குகளை பெற்று வலுவான சக்தியாக மாறியதால், இரு திராவிட கட்சிகளுக்கும் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

மூன்றாவதாக ஒரு சக்தி வலுவாக வந்ததால், இந்த இரு திராவிட கட்சிகளுக்கும் இருந்த வாக்குகள் அந்தப் பக்கம் சென்றுள்ளன. எல்லா சமூகத்தை சேர்ந்தவர்களும் தவெகவுக்கு வாக்களித்துள்ளனர். ஆனால், சிலர் திட்டமிட்டு விசிக வாக்குகள்தான் தவெகவுக்கு மாறியுள்ளதாக ஒரு தோற்றத்தை உருவாக்க பார்க்கின்றனர். விசிகவுக்கு அரசியல் முக்கியத்துவம் கிடைத்துவிடக் கூடாது என காழ்ப்புணர்ச்சி கொண்ட கூட்டம் இதனை தொடர்ந்து பரப்புகின்றனர்.

திருமாவளவனால் தான் திமுக கூட்டணி வென்றது என்ற ஒரு கருத்துருவாக்கம் இருந்தது. 2016-க்கு பிறகு நடந்த தேர்தல்களில் திமுக கூட்டணி தொடர்ந்து வெற்றிபெற்று வந்தது. அப்போது விசிகவினர், தலித் மக்கள் திமுக கூட்டணியை வெகுவாக ஆதரிக்கிறார்கள், அதனால்தான் இந்த வெற்றி என ஒரு கருத்துருவாக்கம் இருந்தது. இதனை உடைக்கவே விசிக வாக்குகள் எல்லாம் தவெக பக்கம் சென்று விட்டது. அதனால்தான் திமுக தோற்றது என ஒரு தவறாக கருத்தை திட்டமிட்டு பரப்புகிறார்கள்.

தலித் மக்கள் எல்லாம் சினிமா மோகத்தில் தவெகவுக்கு வாக்கு போட்டதாக சொல்கிறார்கள். அதாவது, இந்த மக்கள் அரசியல்படுத்தப்படாமல் இருப்பது போல தோற்றத்தை உருவாக்குகிறார்கள். முன்பு காசு வாங்கி கொண்டு தலித் மக்கள் வாக்கு போட்டதாக சொன்னார்கள். இப்போது தவெக வாக்குக்கு காசே கொடுக்காமல் வென்றுவிட்டார்கள். எனவே அந்த குற்றச்சாட்டை சொல்ல முடியவில்லை.

இன்று திமுக 59 இடங்களில் திமுக வெற்றி பெறுவதற்கு விசிகவின் பங்களிப்பு மகத்தானது. ஆனால், அதனை சொல்ல மாட்டார்கள். ஏனெனில் விசிகவுக்கு கிடைக்கும் முக்கியத்துவத்தை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நாங்கள் யாரிடமும் எதுவும் கேட்கவில்லை. அவர்களே முதல்வர், துணை முதல்வருக்கு பரிந்துரைக்கிறார்கள். இப்போது நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கிறார்கள். இது சிலருக்கு வயிற்றெரிச்சலாக உள்ளது. நான் சொல்லித்தான் பல அதிகாரிகளை நியமித்ததாக சொல்கிறார்கள். சாதி அடிப்படையில் நான் இதுவரை எந்த அதிகாரிகளையும் அணுகியது கிடையாது. நான் மக்களுக்காகவே அரசியல் நடத்துகிறேன்.

விசிகவும், திருமாவளவனும் குறிவைக்கப்படுவது உள்நோக்கம் கொண்ட செயல். தமிழக அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக விசிக இருக்கிறது என்பதால் இப்படி செய்கிறார்கள். நீங்கள் விஜய்யை ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என சொன்னீர்களே என என்னிடம் கேட்கிறார்கள். அதே கேள்வியை, ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என உங்களை சொன்ன திருமாவளவனிடம் ஏன் ஆதரவு கேட்டீர்கள் விஜய்யிடம் கேட்கலாமே?

திமுகவுடன் நட்பு தொடரும் என நான் சொன்னதை விமர்சிக்கிறார்கள். ஆனால், தீய சக்தி என சொன்ன விஜய், ஏன் ஸ்டாலினை சந்தித்தார் என கேட்பீர்களா? விஜய்யை ஸ்டாலின் ஏன் வரவேற்றார் என கேட்பார்களா? இப்படி எதையும் கேட்காமல் நான் குழப்புவதாக சொல்கிறார்கள்.

தவெகவுக்கு ஆதரவளிக்கும்போது ஸ்டாலினிடம் நட்பு அடிப்படையில் சென்று சொன்னேன். அமைச்சரவையில் சேரும்போது அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. சில மூத்த அமைச்சர்களிடம் சொன்னேன். இது ஒரு நாகரிக அணுகுமுறை. பதவி கிடைத்தவுடன் எல்லோரையும் உதறிவிட முடியுமா என நான் கேட்டதில் என்ன தவறு?

திருமாவளவன் தடுமாறுகிறார் என உளவியல் ரீதியில் நம்மை (விசிக) பலவீனப்படுத்த பார்க்கிறார்கள். நான் பகை உணர்ச்சியை விரும்பவில்லை. யாரையும் பழிவாங்கும் எண்ணம் இல்லை. திமுக, மதிமுக என நம்மை விமர்சிக்கும் யாரையும் சமூக வலைதளங்களில் விமர்சிக்காதீர்கள். எல்லா புயலிலும் நான் கட்டுக்கோப்பாக இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல், திருமாவளவன் மீது இருக்கும் நம்பிக்கையை சிதைக்கப் பார்க்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT