இடது: நயினார் நாகேந்திரனை கைதை கண்டித்து திருப்பரங்குன்றம் ஜிஎஸ்டி சாலையில் பாஜகவினர் மறியல். | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

 
தமிழகம்

“இனி திமுக அரசு இருக்காது!” - திருப்பரங்குன்றத்தில் கைதுக்கு முன்பு நயினார் நாகேந்திரன் ஆவேசம்

என்.சன்னாசி

மதுரை: “திருப்பரங்குன்றத்தில் திமுக அரசு கை வைத்துள்ளது. இனிமேல் திமுக அரசு இருக்கவே இருக்காது. தீபம் ஏற்றும் வரை போராடுவோம்” என்று திருப்பரங்குன்றத்தில் கைது செய்யப்படுவதற்கு முன்பு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆவேசத்துடன் கூறினார்.

உயர் நீதிமன்றம் உத்தரவை தொடர்ந்து ஆட்சியரின் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டு, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்கு வந்த மனுதாரர் உள்ளிட்டோரை மாநகர போலீஸார் தடுத்து திருப்பி அனுப்பினர். நீதிமன்றம் உத்தரவை நிறைவேற்ற அனுமதிக்காத போலீஸாரை கண்டித்து கோயில் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்ட 100 பேரை போலீஸார் கைது செய்ததால், திருப்பரங்குன்றம் பகுதியில் தொடர் பதற்றமும், பரபரப்பும் நிலவி வருகிறது.

இந்தக் கைது நடவடிக்கைக்கு முன்பு செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியது: “தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதில் கிடைத்த வெற்றி என்பது தமிழகம் முழுவதிற்கும் கிடைத்த வெற்றியாக பார்க்கிறோம். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தேவையின்றி தலையிடுகிறது. தமிழக அரசு மேல்முறையீடு செல்வதில் ஆட்சேபம் இல்லை. தீர்ப்பை தமிழக காவல் துறை மதிக்கிறதா இல்லையா என்ற கேள்வி எழுகிறது.

நீதிபதியின் தீர்ப்பை நிறைவேற்ற அரசு, காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும். அதுதான் நியாயம். நீதிபதியால் உத்தரவு மட்டுமே போட முடியும். அவரே எல்லாம் போய் செய்ய முடியாது. போலீஸ் கைது செய்யதால் கூட போகவேண்டியதுதான். போலீஸாரை அடிக்க முடியுமா? நீதிமன்றத்துக்கும் அரசுக்கும் உள்ள பிரச்சனையில் எங்களுக்கு நியாயம் கேட்கிறோம். தீபத் தூணில் தீபம் ஏற்றவேண்டும். அதற்கு எங்களை அனுமதிக்க கேட்கிறோம். எந்த நீதிபதியை எதிர்த்து மேல்முறையீடு செய்தார்களோ, முருகனின் அருளால் அவரே அதே தீர்ப்பை வழங்கி கொட்டி அனுப்பி இருக்கிறார்.

தமிழக முதல்வர், இந்த மாவட்ட ஆட்சியராக உள்ளார். இப்பகுதியிலுள்ள இஸ்லாமிய மக்கள் எந்த எதிர்ப்பும் செய்யவில்லை. பிரதமர் மூன்று முறை குஜராத்தில் முதல்வராக இருந்தவர்; மூன்றாவது முறையாக பிரதமராகவும் உள்ளார். ஓர் இஸ்லாமியருக்கும் தொந்தரவு இல்லை. போலி மதச்சார்பின்மை பேசி அரசாங்கத்தை நடத்துகிறார்கள். இதற்கு விடிவு காலம் வரும். இமயமலைக்கு நிகரானது இந்த இடம் என பரிபாடலில் சொல்லப்பட்டுள்ளது. இவ்விடத்தில் திமுக அரசு கை வைத்துள்ளது. இனிமேல் திமுக அரசு இருக்கவே இருக்காது. கைது செய்தாலும் தீபம் ஏற்றும் வரை போராடுவோம்” என்று அவர் கூறினார்.

SCROLL FOR NEXT