ஹெச். ராஜா | கோப்புப் படம்
காரைக்குடி: பாஜகவுக்கும் விஜய்க்கும் இடையே எந்த பிரச்சினையும் இல்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, ‘‘இந்தியா மீது 500 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறுவது மிரட்டல் தான். இந்திய பொருட்களுக்கு எதிராக 50% வரியை உயர்த்தியபோதே அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி குறையவில்லை. அதற்கு அவர்கள் நாட்டில் எதிர்ப்பு தான் கிளம்பியது. அதேபோல புதிதாக வரி விதித்தால் அங்குள்ள மக்களே எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.
ஜனநாயகன் திரைப்பட சர்ச்சையைப் பொருத்தவரை, திரைப்படத்தில் விதிமுறைகளை மீறிய காட்சிகள் இருந்தால் அவற்றை சரிசெய்ய தணிக்கை குழு கூறுவது வழக்கமானது தான். ராணுவம் தொடர்பான காட்சிகள் இருந்தால் உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற வேண்டும் என்ற விதி உள்ளது. தணிக்கை குழு சுட்டிக்காட்டிய தவறை சரி செய்து அனுப்பினாலே திரைப்படத்துக்கு சான்றிதழ் கிடைத்துவிடும்.
ஜனநாயகன் திரைப்படத்துக்கான தணிக்கைச் சான்று விவகாரத்தில் அதற்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பாஜவுக்கும் விஜய்க்கும் இடையே எந்த பிரச்சினையும் இல்லை. திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வதுபோன்று ஜனநாயகன் திரைப்பட சான்று விவகாரத்திலும் மேல்முறையீடு செய்ய தணிக்கைத்துறைக்கு வாய்ப்புள்ளது.
‘எதைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்ற நிலையில் தான் காங்கிரஸ் உள்ளது. அதனால் ஜனநாயகன் திரைப்படத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து திமுகவிடமிருந்து கூடுதல் இடங்கள் வாங்க நினைக்கின்றனர்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த ‘பராசக்தி’ தான் எனக்குத் தெரியும். புதிய ‘பராசக்தி’ யார் என்றே எனக்குத் தெரியாது. இந்தியை எதிர்ப்பவர்கள் முதல்வர் குடும்பம், அமைச்சர்கள் நடத்தும் பள்ளிகள் முன் போராட்டம் நடத்தலாமே. இந்தி எதிர்ப்பு என்பது செத்துப்போன குதிரை. அதை சாட்டையால் அடித்து எழுப்ப நினைப்பது என்பது வீண் வேலை.
தமிழகத்தில் அனுமதி கிடைத்த திரைப்படங்களை கூட திரையிட முடியவில்லை. ஆளுங்கட்சியின் முதல் குடும்பத்தின் தயவின்றி தமிழகத்தில் திரைப்படங்களை வெளியிட முடியாத சூழல் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்ததும் அவர்களிடமிருந்து திரை உலகம் விடுவிக்கப்படும்.
பிரதமர் நரேந்திர மோடியை கொச்சைப்படுத்தி பேசுவதை கார்த்தி சிதம்பரம் தவிர்க்க வேண்டும். கடந்த 2004 முதல் 2014 வரை பிரதமாக இருந்த மன்மோகன்சிங் எத்தனை முறை தமிழகத்துக்கு வந்திருப்பார்?. ஆனால் கடந்த 11 ஆண்டுகளில் மோடி 100-க்கும் மேற்பட்ட முறை, ஆண்டுக்கு 10 முறையாவது வருகிறார். ப.சிதம்பரமும் கார்த்தி சிதம்பரமும் தொகுதி பக்கமே வரமாட்டார்கள்.
ப.சிதம்பரம் குடும்பத்துக்கு எதிராக இங்கிலாந்தில் வழக்கு இருப்பதால், அவர்கள் ட்ரம்ப்புடன் கூட்டணி வைக்கலாம். டிஜிட்டல் இந்தியா வந்தபோது, காய்கறி விற்கும் விவசாயிகளிடம் எப்படி பணத்தை செலுத்துவது என்று கேட்டவர் ப.சிதம்பரம். ஆனால், அதை சாதித்து காட்டியவர் மோடி. அதைபோலத்தான் கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் குறித்தும் ப. சிதம்பரம் பொய் பேசி வருகிறார்’’ என தெரிவித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பின்போது பாஜக மாவட்ட தலைவர் பாண்டித்துரை உடனிருந்தார்.