தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் |கோப்புப் படம்

 
தமிழகம்

“கடந்த பத்து ஆண்டுகளாக கொடைக்கானலில் எந்தவித வளர்ச்சியும் இல்லை” - அமைச்சர் மரிய வில்சன்

பி.டி.ரவிச்சந்திரன்

கொடைக்கானல்: “கொடைக்கானல், கடந்த பத்து ஆண்டுகளாக எந்த வளர்ச்சியும், முன்னேற்றமும் இன்றி அதே நிலையில் தான் உள்ளது” என்று தமிழக நிதி அமைச்சர் மரியவில்சன் தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக நிதியமைச்சர் மரியவில்சன் தனியார் விடுதியில் தங்கியுள்ளார். முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்ததினத்தை முன்னிட்டு இன்று (செப்.15) கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா அருகே மாநகராட்சிக்கு சொந்தமான பூங்காவில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க நிதியமைச்சர் மரியவில்சன் சென்றார்.

அப்போது பூங்கா பூட்டப்பட்டிருந்தது. அங்கிருந்த தவெகவினர் பூங்காவின் பூட்டை உடைக்க முயற்சித்தனர். இதை அமைச்சர், தவறு எனக் கூறி தடுத்தார்.

இருப்பினும், “முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளை ஒட்டி அவரது சிலை உள்ள இடத்தை இரண்டு நாட்களுக்கு முன்பே கொடைக்கானல் நகராட்சி தயார் படுத்தியிருக்க வேண்டாமா? இது மிகவும் மோசமான செயல். நான் திண்டுக்கல் அல்லது மதுரை சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்துக் கொள்கிறேன்” என்று கோபமாகக் கூறினார்.

இதன்பின் பூங்கா சாவி கொண்டுவரப்பட்டு பூங்கா திறக்கப்பட அண்ணா சிலைக்கு அமைச்சர் மரியவில்சன் மாலை அணிவித்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கொடைக்கானலில் மருத்துவமனை, சாலை வசதிகள் குறித்து மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதற்கான ஆய்வுக்குத்தான் வந்தேன். இங்குள்ள மக்கள் சாலை வசதியை பெரிய பிரச்சினையாக சொல்கிறார்கள்.

ஆக்கிரமிப்புக்கள் அதிகம். அதனால் தான் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பட்டா பிரச்சினைகளையும் சொல்லியுள்ளார்கள். பிரையண்ட் பூங்கா ஊழியர்கள் பணிநிரந்தம் செய்யக் கோரியுள்ளனர். இதுகுறித்து முதல்வரிடம் கூறி நடவடிக்கை எடுப்பேன். கடந்த பத்து ஆண்டுகளாக கொடைக்கானல் வந்து செல்கிறேன். ஆனால், இப்பகுதி எந்த முன்னேற்றமும் இல்லாமல் அப்படியே தான் உள்ளது.

கொடைக்கானல் வளர்ச்சி குறித்து தமிழக முதல்வரிடம் தனியாக பேசவுள்ளேன். கேபிள் கார் கொண்டுவருவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆட்சியில் சொல் மட்டுமல்ல செயலாகவும் அது மாறும்,” என்றார்.

SCROLL FOR NEXT