தமிழிசை சவுந்தரராஜன் | கோப்புப் படம்
சென்னை: “திமுகவால் வளர்ச்சியைச் சொந்தம் கொண்டாடவே முடியாது. அவர்கள் மக்களிடம் எப்போதும் பொய் மட்டுமே பேசி வந்துள்ளனர். 11-க்கும் மேற்பட்ட திமுக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன,” என தமிழக பாஜகவின் மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
மயிலாப்பூர் சட்டப்பேரவைத் தொகுதியின் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரான தமிழிசை சவுந்தரராஜன், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்தப் பேட்டியில் "திமுகவினர் எப்போதும் பொய் மட்டுமே பேசுவார்கள். நீங்கள் நேரடியாக மக்களிடம் சென்று கேட்டுப் பார்க்கலாம். கடந்த 5 ஆண்டுகளில் உங்கள் எம்எல்ஏ எப்போது இங்கு வந்தார்?. என்னென்ன பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டது என்று. இது மயிலாப்பூர் தொகுதிக்கு மட்டும் உரிய பிரச்சினை அல்ல; தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் இதே நிலைதான் நிலவுகிறது. எனவே, திமுகவால் வளர்ச்சியைச் சொந்தம் கொண்டாடவே முடியாது.
11-க்கும் மேற்பட்ட திமுக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. இத்தகைய முறைகேடுகள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும். தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும். மயிலாப்பூர் தொகுதியில் ஒரு மாற்றமும், புதிய சட்டப்பேரவை உறுப்பினரும் தேவை. நான் மயிலாப்பூர் மக்களின் சகோதரியாக செயல்படுவேன்.
சென்னையின் மையப்பகுதியில் உள்ள ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் இவ்வளவு பின்தங்கிய நிலை நிலவுகிறது என்பதை உங்களால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது. மக்கள் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சினைகளையும் நான் குறித்து வைத்துள்ளேன்; அவை அனைத்தும் நிச்சயம் சரிசெய்யப்படும். தமிழகத்தில் நாங்கள் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம்.
சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் கடந்த பிறகும், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை செயல்படுத்துவது அவசர கதியில் நடக்கிறது என்று எதிர்க்கட்சிகள் கூறினால், வேறு எதைத்தான் அவர்களால் கூற முடியும்?. இத்தகைய கருத்துகளை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். தேர்தல் பிரச்சாரம் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளோம். மக்கள் எங்களை மிகவும் ஆர்வத்துடன் ஏற்றுக்கொள்கிறார்கள். மயிலாப்பூரில் தாமரை நிச்சயம் மலரும்,” என்று அவர் கூறினார்.