பொன்னன்படுகை கிராம சபை கூட்டத்தில் புலிக்குட்டி கேட்டதால் ஆலோசனை நடத்த அதிகாரிகள் சென்றனர். அவர்களின் வருகைக்காக காத்திருந்த பொதுமக்கள்.

 
தமிழகம்

“வீட்டுக்கு ஒரு புலிக்குட்டி கொடுங்கள்” - தேனி கிராம சபை கூட்டத்தில் தெறிக்க விட்ட வன கிராம மக்கள்

என்.கணேஷ்ராஜ்

வருசநாடு: பொன்னன்படுகையில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் வீட்டுக்கு ஒரு புலியை கொடுங்கள் நாங்கள் வளர்த்துக் காட்டுகிறோம் என்று பொதுமக்கள் கூறியதை அதிகாரிகள் தீர்மானமாக நிறைவேற்ற மறுத்தனர். இதனைத் தொடர்ந்து தேதி குறிப்பிடாமல் இக்கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

கடமலை-மயிலை ஒன்றியத்தில் 18 ஊராட்சிகள் உள்ளது. நேற்று சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இதில் நரியூத்து, தும்மக்குண்டு, மேகமலை, பொன்னன்படுகை உள்ளிட்ட ஊராட்சிகளில் மலைக்கிராம மக்களை வெளியேற்ற வனத்துறையினர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பிரதான பிரச்சினையாக முன்வைக்கப்பட்டது.

இது குறித்து இக்கிராம மக்கள் பேசுகையில், வன உரிமைச் சட்டத்தின் படி தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். கிராம மக்களை வெளியேற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு தமிழக அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்தனர்.

ஆனால் இக்கோரிக்கைகளை ஊராட்சி நிர்வாகங்கள் தீர்மானமாக நிறைவேற்றவில்லை. இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. பொதுமக்களிடம் இருந்து இது குறித்த கோரிக்கை மனுவை மட்டும் பெற்றுக் கொண்டனர்.

பொன்னன் படுகை ஊராட்சியில் நடந்த கூட்டத்தில் தனி அலுவலர் சீ்த்தாராமன் தலைமை வகித்தார். இதில் பொதுமக்கள் பேசுகையில், வனத்துறையினரின் இடையூறுகளை தடுக்க வேண்டும்.

தங்கள் கிராமம் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு புலிக்குட்டி கொடுங்கள் அதனை நாங்கள் பத்திரமாக வளர்த்துக் காட்டுகிறோம் என்று பலரும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதை எல்லாம் தீர்மானமாக நிறைவேற்ற முடியாது என்று ஊராட்சி நிர்வாகம் மறுத்தது.

பின்பு உயர் அதிகாரிகளிடம் இது குறித்த தகவலை கூறி போனில் வெகுநேரம் ஆலோசனை நடத்தினர். இதனால் பல மணி நேரம் பொதுமக்கள் காத்திருந்தனர். அதன்பின்பு வந்த தனிஅலுவலர் பொதுமக்களின் இக்கோரிக்கையை தீர்மானமாக நிறைவேற்ற முடியாது என்றார். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அப்படி என்றால் நாங்கள் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டோம் என்று கூறி வெளியேறினர். இதனைத் தொடர்ந்து தேதி குறிப்பிடாமல் இக்கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

இப்பகுதி மலைகிராம மக்களை வெளியேற்ற உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் நேற்று நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில் பலரும் இப்பிரச்சினையை முன்வைத்து தங்கள் வாதங்களை மேற்கொண்டனர்.

SCROLL FOR NEXT