சென்னை: ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வரும் பாதையில் ஸ்டிக்கர் ஒட்டி நூதன முறையில் பணத் திருட்டில் ஈடுபட்ட திரிபுராவைச் சேர்ந்த இருவரை, போலீஸார் கைது செய்துள்ளனர்.
புழல் பகுதியில் உள்ள இந்தியன் வங்கி, விநாயகபுரம் கிளை மேலாளர் விஜயலஷ்மி, புழல் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், கடந்த ஜூன் 23-ம் தேதி இரவு கல்பாளையத்தில் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் மையத்தில் வாடிக்கையாளர் ஒருவர் ரூ.20 ஆயிரம் எடுக்க முயன்றபோது, கணக்கில் இருந்து பணம் பிடித்தம் செய்யப்பட்டது.
ஆனால், ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் வரவில்லை என தெரிவித்திருந்தார். இதையடுத்து, தொழில்நுட்ப நிபுணர்கள் மூலம் சம்பந்தப்பட்ட ஏடிஎம் இயந்திரம் பரிசோதிக்கப்பட்டது. அப்போது, பணம் வெளியே வரும் பகுதியில் மர்ம நபர்கள் ஸ்டிக்கர் ஒட்டி மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால், பணம் வரவில்லை என்று நினைத்து வாடிக்கையாளர்கள் அங்கிருந்து சென்ற பிறகு, அந்த ஸ்டிக்கரை அகற்றி உள்ளே சிக்கியிருந்த பணத்தை அவர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதேபோல், ரூ.20 ஆயிரம், ரூ.2 ஆயிரம், ரூ.6,500 மற்றும் ரூ.2 ஆயிரம் என 4 வாடிக்கையாளர்களிடம் இருந்து மொத்தம் ரூ.30,500 திருடப்பட்டிருப்பதும் விசாரணையில் உறுதியானது.
இதுதொடர்பாக, புழல் காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதன் அடிப்படையில், திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த ராஜிப் ஆலம் (30), நியாஸ் உதின் (22) ஆகிய 2 பேரை நேற்றுமுன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் மீட்கப்பட்டது.
விசாரணையில், கைது செய்யப்பட்ட இருவர் மீதும் சோழவரம் காவல் நிலையத்தில், இதேபோன்று நூதன ஏடிஎம் பணம் திருட்டு வழக்கு இருப்பது தெரிய வந்தது.