சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜே.சி.டி. பிரபாகருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சிகளின் குரல் சட்டப்பேரவையில் அதிகம் ஒலிப்பதை சபாநாயகர் உறுதிசெய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜே.சி.டி. பிரபாகருக்கும், பேரவைத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரவிசங்கருக்கும் எனது வாழ்த்துகள்.
மிகப் பெரும் ஆளுமைகளால் பெருமை பெற்ற பொறுப்பில் அமர்ந்துள்ள இருவரும், அந்த மரபினையும், பேரவையின் மாண்புகளையும் காத்திட வேண்டும்.
ஆளும்கட்சியாக இருக்கும் கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கையைவிட, சட்டமன்றத்தில் மற்ற கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கைதான் அதிகம். அதுதான் இந்த முறை மக்களின் தீர்ப்பு!
அதை மதித்து, எதிர்க்கட்சிகளின் குரல் சட்டமன்றத்தில் அதிகம் ஒலிப்பதை உறுதிசெய்யும் வகையில் அப் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இருவரும் அவையை வழிநடத்துவார்கள் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.