நயினார் நாகேந்திரன்
பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இந்த முறை நெல்லையை விட்டு சாத்தூருக்கு ஜாகை மாறப் போகிறார் என்று ஆரம்பம் முதலே செய்திகள் அடிபட்டு வந்த நிலையில், தற்போது அது ஊர்ஜிதமாகி இருக்கிறது. பாஜக போட்டியிடும் தொகுதிகள் பட்டியலில் நெல்லைக்குப் பதிலாக சாத்தூர் இடம்பிடித்திருப்பதே அதற்கு சாட்சி.
2001 சட்டபேரவைத் தேர்தல் முதல் தொடர்ச்சியாக நெல்லை தொகுதியில் போட்டியிட்டு வருகிறார் ராதாபுரம் தொகுதியைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன். ஆனால், ஒரு தேர்தலில் ஜெயித்தால் அடுத்த தேர்தலில் தோல்வி என்பது தான் நயினாரின் தேர்தல் பயோ டேட்டாவாக இருக்கிறது. 1962-க்கு பிறகு நெல்லை தொகுதியில் ஒரு முறை ஜெயித்த யாரும் அடுத்த தேர்தலில் ஜெயித்ததாக சரித்திரம் இல்லை. இது நயினாருக்கும் அப்படியே பொருந்தி வருவதாலேயே இம்முறை தொகுதி மாறி அவர் சாத்தூரில் களமிறங்குவதாக சென்டிமென்ட் செய்தி சொல்கிறார்கள் நெல்லை பாஜக வட்டாரத்தில்.
“திருநெல்வேலியில் மீண்டும் போட்டியிடுவீர்களா?” என்று செய்தியாளர்கள் கேட்ட போதெல்லாம் மழுப்பலாகவே பதில் சொல்லி வந்த நயினார் நாகேந்திரன், சாத்தூர் தொகுதியில் கணிசமாக இருக்கும் முக்குலத்தோர் வாக்கு வங்கியை குறிவைத்தும் அங்கு இடம்பெயர்வதாகச் சொல்கிறார்கள்.
தொகுதி மாறப் போவதை வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் கடந்த 6 மாத காலமாகவே சாத்தூர் தொகுதியில் வீடுபிடித்து குடியேறும் வேலைகளை ஓசைப்படாமல் செய்து வந்தார் நயினார்.
அத்துடன், அவரது மகன் நயினார் பாலாஜி, சாத்தூர் தொகுதியில் நிகழ்ச்சிகளை நடத்துவதிலும், முக்குலத்தோர் அமைப்புகளை ‘கவனிப்பதிலும்’ அக்கறை காட்டினார். இதை வைத்து, நயினார் நெல்லையிலும் பாலாஜி சாத்தூரிலும் களமிறங்கப் போவதாகக் கூட செய்திகள் கசிந்தன. அதேசமயம், மாநில பாஜக துணைத் தலைவரும் தனது நண்பருமான கோபால்சாமிக்கு ராஜபாளையம் தொகுதியைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்திருந்தார் நயினார் நாகேந்திரன்.
இதை நம்பி, கோபால்சாமி வாக்குச் சேகரிப்பிலும் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில், ஒரே (விருதுநகர்) மாவட்டத்தில் இரண்டு தொகுதிகளை பாஜக-வுக்கு கேட்கமுடியாது என்பதால் சாத்தூரை மட்டும் சாதுர்யமாக பெற்றுக் கொண்டு நண்பருக்கு எப்படியோ சமாதானம் சொல்லி இருக்கிறார் நயினார்.