சென்னை அண்ணா சாலையில் உள்ள கருணாநிதி சிலை முன்பு போராட்டம் நடத்திய மாநகராட்சி தூய்மைப் பணியாளர்.
படம்: பி.வேளாங்கண்ணி ராஜ்.
2026, ஜனவரி 20-ம் தேதி, ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் கூடுகிறது. இந்த நிலையில், பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம், அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கான போராட்டம், தூய்மைப் பணியாளர்கள் போராட்டம், சட்டம் - ஒழுங்கு விவகாரம் என்று தமிழக அரசுக்கு வரிசை கட்டி நிற்கின்றன பிரச்சினைகள்.
“தேர்தல் நெருங்கும் வேளையில் கட்சியை கவனிப்பதா? ஆட்சிக்கு ‘செக்’ வைக்கும் போராட்டங்களில் தலையிடுவதா என திண்டாடும் திமுக, மனசாட்சியோடு கவனிக்க வேண்டிய ஒன்று, கடைநிலை ஊழியர்களான தூய்மைப் பணியாளர்கள் நடத்தி வரும் போராட்டம்” என்று பொதுவெளியில் கூட பரவலான பேச்சுகள் எழத் தொடங்கிவிட்டன.
அதிமுக ஆட்சியில் தூய்மைப் பணிகளை நிர்வகிப்பது தனியார்மயம் ஆக்கப்பட்டபோது, அப்போதைய எதிர்க் கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின், “திமுக ஆட்சிக்கு வந்தால் அந்தப் பணிகள் நிரந்தரம் செய்யப்படும்” என்று தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார்.
வாக்குறுதி எண் 285: ‘தூய்மைப் பணியாளர்களின் பணி, ஊதியம், ஓய்வுதியம் சம்பந்தமான கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும்’ என வாக்குறுதி எண் 285-ல் திமுக தெரிவித்திருந்தது. அதனால் தான் ”சொன்னது என்னாச்சு?” என்று அரசுக்கு கேள்வி கேட்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாக அரசியல் செய்யும் தலைவர்கள் முதல் சமூக ஆர்வலர்கள் வரை குரல் கொடுக்கின்றனர்.
ஆகஸ்டில் அதிரவைத்த போராட்டம்: கடந்த ஆகஸ்ட் மாதம் ‘தூய்மைப் பணியை தனியாருக்கு வழங்கக் கூடாது, பணி நிரந்தரம் தேவை’ உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் ரிப்பன் மாளிகை முன்பு 10 நாட்களுக்கும் மேலாக நடத்திய போராட்டம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் 11 மண்டலங்களுக்கான திடக்கழிவு மேலாண்மை சார்ந்த பணிகள் கடந்த அதிமுக காலத்திலேயே தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன. மீதமிருக்கும் 4 மண்டலங்களில் ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய இரண்டு மண்டலங்களில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை ‘சென்னை என்விரோ சொல்யூஷன்ஸ் லிமிடெட்’ என்கிற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பதாக சென்னை மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றியது. இதற்குத் தேவைப்படும் 3,809 தூய்மைப் பணியாளர்களில் ஏற்கெனவே தற்காலிகப் பணியாளர்களாக இருக்கும் 2,034 பேருக்கு முன்னுரிமை அளித்து எடுத்துக்கொள்வதாக அந்நிறுவனம் கூறியது.
எனினும், இந்தத் தொழிலாளர்கள் பெற்ற ஊதியமான ஏறக்குறைய ரூ.23,000 என்பது இனி ரூ.16,000 ஆகக் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 12 நாள் தற்செயல் விடுப்பு, 12 நாள் ஈட்டிய விடுப்பு, தேசிய விடுமுறையின்போது வேலை செய்தால் இரண்டு மடங்கு ஊதியம், ரூ.11.52 லட்சம் மதிப்பில் விபத்துக் காப்பீடு போன்றவை அவர்களுக்கு முன்வைக்கப்பட்டாலும், ஊதியக் குறைப்பு என்பதை தூய்மைப் பணியாளர்கள் கடுமையாக எதிர்த்து போராட்டங்களை முன்னெடுத்தனர்.
ஆனால், அவர்களை நள்ளிரவில் குண்டுக்கட்டாக கைது செய்தது காவல் துறை. நீதிமன்ற வழக்குகள் மூலம் அவர்களுக்கு ஊதியம் குறைக்கப்படக் கூடாது என்ற தீர்ப்பு வெளியாகி சிறு ஆறுதலாக அமைந்தது.
கேட்டது என்ன? கொடுக்கப்பட்டது என்ன? - ஆனாலும் கூட அரசு பணி நிரந்தக் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை. மாறாக, தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு, தூய்மைப் பணியாளர்கள் பணியின்போது உயிரிழந்தால், நல வாரியத்தின் மூலம் வழங்கப்படும் நிதி உதவி, தூய்மைப் பணியாளர்கள் அவர்களின் குடும்பத்தினர் சுய தொழில் தொடங்கும்போது அத்தொழில் திட்ட மதிப்பீட்டில் 35% தொகை அதிகபட்சமாக ரூ.3,50,000 மானியம், தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்காக புதிய உயர்கல்வி உதவித் தொகை, தூய்மைப் பணியாளர்களுக்கு குடியிருப்புகள் என 6 அறிவிப்புகளை வெளியிட்டது.
இவற்றில் தூய்மைப் பணியாளர்களுக்கான முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நவ.15-ம் தேதி தொடங்கி வைத்தார். டிசம்பர் 6-ம் தேதி முதல் தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
ஏற்கெனவே தூய்மைப் பணியாளர்கள் முன்னெடுத்த போராட்டங்கள் பல மாதங்களைக் கடந்துவிட்ட நிலையில், சென்னையில் மீதமிருக்கும் அண்ணாநகர், தண்டையார்பேட்டை ஆகிய மண்டலங்களிலும் குப்பைகளை அகற்றும் பணிகளை தனியாரிடம் வழங்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. அதற்கு எதிர்ப்புக் குரல் வலுக்கவே, அத்தகைய நடவடிக்கை இப்போதைக்கு இல்லை என்று அரசுத் தரப்பில் சொல்லப்பட்டாலும் கூட, பிப்ரவரியில் மீண்டும் புதுப்பிக்கப்பட்ட டெண்டரை புதுப்பித்து வெளியிடலாம் என்ற தகவல்களும் இருக்கின்றன.
கேள்விக்குள்ளாகும் அரசின் வாதம்: அரசுத் தரப்பில் இந்த தனியார்மயமாக்கலுக்கு கூறப்படும் காரணம் விவாதப் பொருளாகியுள்ளது. சென்னையில் தூய்மைப் பணிகள் சிறப்பாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக இந்தக் கொள்கை முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் நேரடிக் கட்டுப்பாட்டில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட பணியாளர்கள்தான், தனியார் நிறுவனங்களின் கீழும் அதே பணியை மேற்கொள்ளப் போகிறார்கள்.
அவ்வாறு இருக்கும்போது, தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்தால்தான் தூய்மைப் பணிகள் சிறப்பாக நடைபெறும் என்றால், அது தூய்மைப் பணியாளர்களின் தவறு இல்லை; மாறாக மாநகராட்சியின் நிர்வாகத் திறமையின்மைதான் என்பது எதிர்க்கட்சிகளின் வாதமாக உள்ளது. மேலும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன.
எகிறும் விலைவாசி உயர்வுக்கு இடையே, நாம் குப்பைத் தொட்டியைக் கடக்கவே மூக்கை மூடிக் கொண்டு செல்லும் சூழலில் அதிலேயே உழன்று உழைக்கும் கடைநிலை ஊழியர்களின் ஊதியத்தில் கைவைத்து, தனியார் நிறுவனங்களை சுரண்ட அனுமதிப்பது என்ன நியாயம் என்று சமூக ஆர்வலர்கள் வினவுகின்றனர்.
மீண்டும் எழும் குரல்: இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் மீண்டும் வலுப்பெற்றுள்ளது. இன்றைக்கு மட்டும் கருணாநிதி நினைவிடம், சென்னை அண்ணாசாலையில் உள்ள கருணாநிதி சிலை, தலைமைச் செயலகம் என 3 மூன்று இடங்களில் தூய்மைப் பணியாளர்கள் போராடி கைதாகியுள்ளனர்.
அண்மையில் செவிலியர்கள் நடத்திய போராட்டத்துக்கு ஒரு தற்காலிக தீர்வு கிடைத்தது. பொங்கல் பண்டிகைக்குள் 700+ செவிலியர்களுக்கு பணி நிலைப்புக் கடிதம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதேபோல், பழைய ஓய்வூதியத் திட்டத்தின் ககன் தீப் சிங் பேடி தலைமையிலான குழு அரசிடம் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. எல்லா போராட்டங்களுக்கும் ஏதேனும் ஒரு அடுத்த நகர்வு இருக்க, நம் கோரிக்கைகள் மட்டும் கிடப்பிலேயே இருக்கின்றதே என்று மீண்டும் போராட்டங்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர் தூய்மைப் பணியாளர்கள்.
உழைப்போர் உரிமை இயக்கத் தலைவர் வழக்கறிஞர் K.பாரதி
இதற்கிடையில், உழைப்போர் உரிமை இயக்கத் தலைவர் வழக்கறிஞர் K.பாரதி, ‘இந்து தமிழ் திசை’ டிஜிட்டலுக்கு அளித்த பேட்டியில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம், கோரிக்கைகள், அரசின் நிலைப்பாடு எனப் பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேசியுள்ளார். அதன் விவரம்:
“தூய்மைப் பணியாளர்கள் கடைநிலை ஊழியர்கள், சாமானியர்கள். அவர்கள் வாங்கும் சம்பளம் சொற்பம். பெரும்பாலும் பெண்கள் இப்பணியில் இருக்கிறார்கள். இவர்களில் பலர் கணவரால் கைவிடப்பட்டவர்கள், குடி நோயால் உயிரிழந்தவர்களின் மனைவி என்றுள்ளனர். அவர்களுக்கு இந்த 23 ஆயிரம் ரூபாய் சம்பளம் மிகவும் முக்கியம்.
ஏற்கெனவே தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் அது நினைத்தால் எந்த ஊழியரையும் பணி நீக்கம் செய்யலாம் என்ற அதிகாரத்தை தன்னகத்தே வைத்துள்ளது. அப்படியிருக்க மாநகராட்சி ஊழியராக 10 ஆண்டுகளுக்கும் மேல் பணி செய்துவிட்டு, தூய்மைப் பணியை தனியாருக்கு அரசு தாரை வார்த்ததால் பணி நிலைப்பும் இல்லாமல், உத்தரவாதமும் இல்லாமல் அவர்கள் பணி செய்ய வேண்டும். அதுவும் புதிய பணியாளரைப் போல் பணி செய்ய வேண்டும். மேலும், தனியார் நிறுவனங்கள் அவர்கள் ப்ராஜக்ட் உள்ள எந்த இடத்துக்கும் வேண்டுமானால் இந்த தொழிலாளர்களை பணியிட மாற்றம் செய்ய முடியும். மேலும், ஊதியத்தையும் குறைக்க முடியும். இது எல்லாம் ஒரு கடைநிலை ஊழியருக்கு நேருமென்றால், அதை அரசு வேடிக்கை பார்க்கும் என்றால் அது அநியாயம் இல்லையா?
அரசாங்கம், சென்னையில் மாநகராட்சி ஊழியர்களைக் கொண்டு தூய்மைப் பணியை மேற்கொள்ளும் பட்சத்தில் இப்போது தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர் விடும் பெருந்தொகையை விட சொற்பமான செலவே ஆகும். ஆனால் புயல், மழை, வெள்ளம், கரோனா என பல பேரிடர்களிலும் திறம்பட வேலை செய்து பணியாளர்களை தூக்கி எறியும் வகையில் தனியாருக்கு மாநகராட்சி மண்டலங்களை தாரை வார்க்கிறது.
எங்களுடைய பிரதான கோரிக்கை... சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு மீண்டும் மாநகராட்சியில் பணி வழங்க வேண்டும். தனியார் நிறுவனங்களுக்கு அனுப்பிய தூய்மைப் பணியாளர்களைத் தாண்டியும் பணியில்லாமல் 1500-க்கும் அதிகமானோர் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் வழங்கும் அளவுக்கு சென்னை மாநகராட்சியில் காலிப் பணியிடங்களும் இருக்கின்றன. அது மட்டுமல்லாது தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்தாலும் கூட, அரசாங்கம் நினைத்தால் பணி நிலைப்பு செய்யலாம். இதை முந்தைய காலக்கட்டங்களில் எதிர்க்கட்சியிலிருந்த இப்போதைய முதல்வரே சொல்லியிருக்கிறார்.
செவிலியர்கள் போராடினால் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள் ஆனால் தூய்மைப் பணியாளர்களை அழைத்து ஏன் இந்த அரசு பேச மறுக்கிறது? இவர்களைத்தான் பணிநீக்கம் செய்து தூக்கி எறிந்துவிட்டோமே; இனி எதற்கு ஆவார்கள் என்ற மனப்பான்மையா? இவர்களால், தேர்தல் நேரத்தில் என்ன பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்ற ஏளனமா என்று தெரியவில்லை.
தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தம் செய்யப்படும் என்று கடந்த தேர்தலில் வாக்குறுதி அளித்த இந்த அரசு, இந்தத் தேர்தலில் தூய்மைப் பணியாளர்கள் விவகாரத்தில் என்ன சொல்லப் போகிறது?!. தூய்மைப் பணியாளர்கள் பற்றி எதுவுமே பேசாமல் புறக்கணிக்கப் போகிறார்களா?
சென்னையில் நடக்கும் போராட்டம் தமிழகம் முழுவதும் பரவும். இதை அரசும் உணர்ந்திருக்கிறது. இந்தப் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு காணப்பட அரசே விரும்பினாலும் கூட யாரோ சில அமைச்சர்களுக்கு இடையேயான ஈகோ பிரச்சினைகள் இருக்குமோ என்றளவுக்குக் கூட யோசிக்கத் தூண்டுகிறது. எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி, சென்னை மாநகராட்சி மண்டலம் 5, 6 ஆகியவற்றை தன் பொறுப்புக்குள் வைத்திருக்கும் அமைச்சர் சேகர்பாபுவுக்கும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கும் இடையேயான ஈகோவும் தூய்மைப் பணியாளர்கள் பிரச்சினை இழுபறியாக இருக்கக் காரணம் என்று யோசிக்கத் தோன்றுகிறதி.
நான் கடந்த டிச.18 அன்று அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து, தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கை மனுவை அளித்தேன். அவர் டிச.21-க்குப் பிறகு மீண்டும் சந்திப்பதாக சொன்னார். அதன் பின்னர் ஒரு வாரம் ஆகியும் கூட இதுவரை எந்தவித அசைவும் அந்தப் பக்கம் இருந்து இல்லை. இந்தச் சூழலில் நாங்கள் போராட்டத்தை இன்னும் தீவிரப்படுத்தியுள்ளோம். ஒருவேளை ஈகோ பிரச்சினைதான் இழுபறிக்குக் காரணம் என்றால் இதை முதல்வரும், துணை முதல்வரும் தலையிட்டுத் தீர்க்கலாம் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
தமிழகத்தில் சமீப ஆண்டுகளில் தொடர்ச்சியாக 150-க்கும் மேற்பட்ட நாட்கள் போராட்டம் நடந்துள்ளது என்றால் அது தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் தான். எங்களுக்கு அரசை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணமில்லை, நாங்கள் அரசு விரோதிகள் இல்லை. தூய்மைப் பணியாளர்கள் பரம ஏழைகள், பெரும்பாலும் பட்டியலின மக்களாக உள்ளனர். சமூகப், பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கு நாங்கள் நீதி கேட்கிறோம்” என்று அவர் கூறினார்.