சென்னை: கிறிஸ்தவ, இஸ்லாமிய வழிப்பாட்டு தலங்களை அமைக்க தடையில்லா சான்று பெற வேண்டியது கட்டாயம் இல்லை என்ற அரசாணையை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கடந்த மாதம் 23-ஆம் தேதி திருநெல்வேலியில் கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், இனிமேல் மத வழிபாட்டு தலங்களுக்கு தடையில்லா சான்று பெறத் தேவையில்லை எனும் அறிவிப்பை வெளியிட்டார். அதனையொட்டி ஜனவரி 8-ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே, தமிழகத்தில் பல பகுதிகளில் அனுமதி இல்லாத ஜெபக்கூடங்கள், மசூதிகள், சர்ச்சுகள் பெருகி வருகின்றன. அனுமதி இல்லாமல் கட்டப்படும் கிறிஸ்தவ, இஸ்லாமிய வழிபாட்டு தலங்களைப் பற்றி இந்துக்கள் புகார் கொடுத்தாலோ, அதிகாரிகளிடம் முறையிட்டாலோ அரசியல் அழுத்தம் காரணமாக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.
தற்போது இந்த தடையில்லா சான்று பெறத் தேவையில்லை எனும் அரசாணையின்படி திடீர் ஜெபக்கூடங்களும் சர்ச்சுகளும் மசூதிகளும் தர்காகளும் முளைத்திட வாய்ப்பு இருக்கிறது. இதனால் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டு மக்களிடையே மதக்கலவரம் உண்டாகும் சூழ்நிலையை உருவாக்கும்.
வணிக வளாகம் குடியிருப்பு என அனுமதி பெற்று விட்டு பிறகு சில மாதங்கள் கழிந்து அதை ஜெபக்கூடங்களாக மாற்றும் நிகழ்வுகள் தமிழகத்தில் தொடர்ந்து வண்ணம் உள்ளன. அரசு நிலங்கள் கூட ஆக்கிரமிக்கப்பட்டு சிறுபான்மை வழிபாட்டு தலங்களாக மாற்றப்பட்டு வரும் சூழ்நிலையில், இந்த அரசாணை முழுக்க முழுக்க திமுகவின் சிறுபான்மை ஓட்டு வங்கி அரசியலாகும் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
1982-ல் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காட்டில் கிறித்துவர்களால் மதக்கலவரம் ஏற்பட்டது. அப்போது முதல்வராக இருந்த எம்ஜிஆர், நீதிபதி வேணுகோபால் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்தார். நீதியரசர் வேணுகோபால் ஆணையம், ஒவ்வொரு வழிபாட்டு தலத்துக்கும் இடையே 100 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும், முன்பே இருக்கும் வழிபாட்டு இடத்திற்கு அருகில் அத்துமீறி புதிய வேறு வழிபாட்டு கட்டிடம் அமைக்கக்கூடாது, புதிதாக அமைக்கப்படும் வழிபாட்டு கட்டிடங்களுக்கு மாவட்ட ஆட்சியரிடம் தடையில்லா சான்றிதழ் அவசியம் என்று வலியுறுத்தியது.
மேலும், ஆசைகாட்டி, அச்சுறுத்தி மதம் மாற்றுவதை தடை செய்ய சட்டம் இயற்றவும் நீதியரசர் வேணுகோபால் பரிந்துரை செய்திருந்தார். அந்த பரிந்துரைகள் தமிழக சட்டசபையில் வைக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதன்மூலம், அதன்பிறகு தமிழகத்தில் முழுமையாக மதக் கலவரம் தடுக்கப்பட்டது.
ஆனால், இதனை மதிக்காமல் ஆளும் தி.மு.க அரசு இந்த அரசாணையை வெளியிட்டுள்ளது. குறிப்பாக இன்று பல பகுதிகளில் இந்து கோயில்களுக்கு அருகில் சிறுபான்மை வழிபாட்டுத்தலங்கள் பெருகி வருகின்றன. அந்த வழிபாட்டு இடங்களில் இந்துக்களின் சமய நம்பிக்கைகளை ஏளனப்படுத்தி மக்கள் மனங்களை புண்படுத்துகிறார்கள். அதனால் தமிழகம் முழுவதும் பல இடங்களில் இந்துக்கள் காவல்துறையில் புகார் கொடுத்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் நீதிமன்ற தீர்ப்பை திமுக மதிக்கவில்லை. இந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்தினால் மதக்கலவரம் ஏற்படும் என்று நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்தபோது நீதியரசர்கள் ஆளும்கட்சி தனது அரசியலுக்காக மலிவான செயலில் இறங்குகிறது, மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கிறது என்பதை சுட்டிக்காட்டி எச்சரித்தனர்.
இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் தேர்தல் வர இருக்கும் சமயத்தில் திமுக மக்களிடையே மதக்கலவரத்தை ஏற்படுத்தி தாங்கள் சிறுபான்மை காவலர்களாக காட்டி ஓட்டு வாங்க நினைக்கிறதா?
திமுகவின் இந்த விபரீத செயல்பாட்டை இந்துக்கள் உணர வேண்டும். சட்டவிரோதமாக செயல்படும் ஆளும் திமுகவின் நோக்கத்தை முறியடிக்க இந்து முன்னணி சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்கும்.
தற்போது அறிவிக்கப்பட்ட அரசாணையின்படி 2019 முதல் 2024 வரை பொது கட்டட விதிகளுக்கான உத்தரவில் மதம் சார்ந்த கட்டடங்களுக்கு அனுமதி பெற தேவையில்லை எனவும், ஏற்கனவே மத வழிபாட்டு தலங்கள் கட்டுவதற்காக விண்ணப்பித்திருந்தவர்களின் மனுக்களுக்கும் தடையில்லா சான்று பெற தேவையில்லை என்றும் உள்ளது. இது போன்ற அறிவிப்பால் பலவிதமான பிரச்சினைகள் ஏற்படலாம்.
அனுமதி பெறாத, சட்டவிரோத மத வழிபாட்டு தலங்களை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் ஆளும் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அழுத்தம் காரணமாக அரசாங்க அதிகாரிகளால் அதை செயல்படுத்த முடிவதில்லை. அவர்கள் நீதிமன்றங்களில் கண்டனத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
2026 தேர்தலை மனதில் கொண்டு சிறுபான்மை ஓட்டுகளை வாங்குவதற்காக திட்டமிட்டு இந்த விஷமத்தனம் அரசாணையாக வெளியாகி இருக்கிறது. இந்து கோவில் கட்டுவது என்றால் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருந்து வரும் நிலையில் சிறுபான்மையினர் வழிபாட்டுத்தலங்கள் பெருக இந்த அரசு முனைகிறது.
சமூகத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தி கலவரத்தை உருவாக்கும் இந்த விபரீதமான அரசாணையை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என தமிழக அரசை இந்து முன்னணி வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது’’ என தெரிவித்துள்ளார்.