பாஜக தலைமையகம் | கோப்புப் படம்

 
தமிழகம்

‘ஜனநாயகன்’ படத்தை வைத்து திமுக, காங். கட்சிகள் அரசியல் செய்கின்றன: பாஜக குற்றச்சாட்டு

மோகன் கணபதி

சென்னை: தேர்தல் காலம் என்பதால், மக்களை திசை திருப்பும் நோக்கில் ‘ஜனநாயகன்’ படத்தை வைத்து திமுகவும், காங்கிரஸ் கட்சியும் அரசியல் செய்வதாக பாஜகவின் மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பொதுவாக ஒரு திரைப்படத்தை குடும்பத்துடன் பார்ப்பதற்கு ஏற்ற வகையில் இருந்தால் மட்டுமே தணிக்கைத் துறையால் ‘யுஏ’ சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஒரு படத்துக்கு இந்தச் சான்றிதழை வழங்க வேண்டுமெனில், அதில் இடம்பெறும் காட்சிகள் மற்றும் வசனங்கள் குறித்த சில சட்ட விதிமுறைகள் உள்ளன. அந்த விதிகளுக்கு உட்பட்டு, திரைப்படத்தை ஆய்வு செய்த பின்னரே தணிக்கைத் துறை சான்றிதழ்களை வழங்கும்.

‘ஜனநாயகன்’ படத்துக்கு ‘யுஏ’ சான்றிதழ் வழங்குவதற்காக, சில குறிப்பிட்ட காட்சிகளை நீக்கும்படி படக்குழுவினருக்கு தணிக்கைத் துறை அறிவுறுத்தி உள்ளது. ஆனால், அந்த மாற்றங்களை செய்ய படக்குழுவினர் மறுத்து வருவதாகத் தெரிகிறது. இது முழுக்க முழுக்க தணிக்கைத் துறைக்கும் படக்குழுவுக்கும் இடையிலான நடைமுறைச் சிக்கலாகும்.

இந்த விவகாரத்துக்கும் மத்திய அரசுக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. திரைப்படத் துறையில் அரசியல் செய்ய வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை. ஆனால், வரவிருக்கும் தேர்தலை மனதில் வைத்து, மக்களை திசை திருப்புவதற்காக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகள் திட்டமிட்டு மத்திய அரசுக்கு எதிராக அவதூறு பரப்பி வருகின்றன.

உண்மையை உணர்ந்து நடிகர் விஜய் தரப்பினர் இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய முயலக்கூடாது. ‘ஜனநாயகன்’ திரைப்படம் விரைவில் வெளியாகி வெற்றி பெற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT