தமிழகம்

அமைச்சர் ஷாஜகான் மன்னிப்பு கேட்கக் கோரி திமுகவினர் போஸ்டர்: தஞ்சையில் பரபரப்பு

சி.எஸ். ஆறுமுகம்

தஞ்சை: பாபநாசம் தொகுதி எம்எல்ஏவும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான் திமுகவை விமர்சனம் செய்ததால் ஆத்திரமடைந்த திமுகவினர், அவர் மன்னிப்பு கேட்கக் கோரி தஞ்சையில் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான் அண்மையில் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும்போது, திமுகவை விமர்சனம் செய்தும், 50 ஆண்டுகளளில் திமுக துடைத்து எரியப்படும் என்றும் பேசினார்.

இதனால் ஆத்திரமடைந்த திமுகவினர், “பாபநாசம் தொகுதியில் திமுக தயவில் வெற்றி பெற்றுவிட்டு, திமுகவை விமர்சனம் செய்யும் பச்சோந்தி ஷாஜஹானே” என்று குறிப்பிட்டு கண்டனம் மற்றும் அமைச்சரின் பேச்சிற்கு மன்னிப்பு கோரியும் பாபநாசம் தொகுதி மற்றும் பேரூர் பகுதிகளில் போஸ்டர்களாக ஒட்டியுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த போலீஸார், தொகுதியில் அமைச்சரை கண்டித்து ஒட்டப்பட்ட போஸ்டர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் போஸ்டர் ஒட்டியவரிடம் இருந்த 100-க்கும் மேற்பட்ட போஸ்டர்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அமைச்சரை கண்டித்து பாபநாசம் பகுதியில் போஸ்டர் ஒட்டப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT