தமிழகம்

மேகேதாட்டு விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் அமைப்பதால் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எந்த பாதிப்பும் வராது: தங்கம் தென்னரசு

செய்திப்பிரிவு

சென்னை: முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர் களிடம் கூறியதாவது: மேகேதாட்டு பிரச்சினை தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினை. இதையொட்டி சட்டப்பேரவையில் திமுக சார்பில் நடுவர் நீதிமன்றம் கோரப்பட்டது.

முதல்வர் அதை ஏற்றுக்கொண்டு முன்மொழிந்ததையடுத்து, பேரவை உறுப்பினர்களின் முடிவுக்கு விடப்பட்டு, அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் மேகேதாட்டு அணைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதிதாக நடுவர் மன்றம் அமைப்பதால், 2018-ம் ஆண்டு பிப்.16-ம் தேதி உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்புக்கு எந்த விதத்திலும் பாதிப்பு வராது. அந்த தீர்ப்பை இதனால் மாற்ற முடியாது.

ஏற்கெனவே கர்நாடக அரசு பெண்ணையாற்றின் குறுக்கே அணை கட்ட முயற்சித்தபோது தமிழக அரசு அதை எதிர்த்தது. இதுதொடர்பாக அதிமுக ஆட்சி காலத்தில் ஒரு வழக்கும் தொடரப்பட்டது.

அவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒரு நடுவர் நீதிமன்றத்தை நியமிக்க மத்திய அரசை அணுகலாம் என அனுமதி அளித்தது. அதன் விளைவாக 2019-ம் ஆண்டில் பெண்ணையாற்றின் குறுக்கே அணை கட்டுவதை தடுப்பது தொடர்பாக புதிய நடுவர் நீதிமன்றம் அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

மேகேதாட்டு அணை தொடர்பாக புதிய நடுவர் மன்றம் அமைக்க திமுக அளித்த திருத்தத்தை ஏற்றுக்கொண்டு, முதல்வர் கொண்டுவந்த தீர்மானம் டெல்டா மாவட்ட விவசாயிகளைக் காப்பதற்கான ஒரு முயற்சி.

விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கிற ஒரு விஷயத்தில் மீண்டும் ஒரு விவாதத்தை உருவாக்குவது, பேரவையில் நாம் காட்டியிருக்கிற ஒற்றுமை உணர்வைப் பாதிக்கும். மேலும் அரசியல் கட்சிகளுக்கு இடையே பிளவு இருப்பதைப்போன்ற ஒரு தோற்றத்தையும் உருவாக்கும்.

இத்தகைய சூழலை ஏற்படுத்திவிடக் கூடாது. அது கர்நாடக அரசுக்கு சாதகமாக அமைந்துவிடும். எனவே, தமிழகத்தில் இருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் இருந்து ஒருமனதாக, திருத்தப்பட்ட தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT