கோப்புப் படம்
மதுரை: ‘தாய் மாமன்’ தங்க மோதிரம் திட்டம் செப்.15-ம் தேதிக்கு பதில் செப்.25-க்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அன்றைய தினத்தில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் முதல்வர் விஜய் திட்டத்தை தொடங்கி வைக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அங்கு நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு, ஒரு கிராம் தங்க கிராம் மோதிரம் வழங்கும் திட்டமான, தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை, மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளான செப்.15-ம் தேதி முதல்வர் விஜய் தொடங்கி வைக்க உள்ளதாகவும், இந்தத் திட்டத்துக்காக ஆண்டுதோறும் ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படும் தேதி மாற்றப்பட்டுள்ளதாகவும், செப். 25-ம் தேதி மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் முதல்வர் விஜய், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தாய்மாமன் சீர் வழங்குவதில் உசிலம்பட்டி பகுதியில் மிக பிரபலம் என்பதால் அங்கு இத்திட்டத்தை தொடங்குவது பொருத்தமாக இருக்கும் என முதல்வர் விரும்புவதாக தெரிகிறது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாக உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “தமிழகத்தின் பாரம்பரிய 'தாய்மாமன் சீர்' முறையை அரசு வழங்கும் விதமாகவும், அரசு மருத்துவமனைகளில் பிரசவத்தை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. செப். 17-ம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் காமராஜர் பெயரிலான காலை உணவு விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைக்கப்போகிறார் என்ற தகவல் உள்ளது. அதே நாளில் மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழா நடப்பதால், அதிலும் முதல்வர் விஜய் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இரண்டு விழாக்கள் இருப்பதால் தங்க மோதிர திட்டத்தை செப். 25-ம் தேதிக்கு தள்ளிவைத்து அன்று உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் தொடங்கி வைக்கலாம் என தகவல் கிடைத்துள்ளது. அதற்கான ஆயத்த ஏற்பாடுகளில் மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத் துறையும் இணைந்து உசிலம்பட்டி மருத்துவமனையில் மேற்கொண்டு வருகிறது.
ஜூன் 22-ம் தேதி முதல் தற்போது வரை 6,500 குழந்தைகளுக்கு இந்த திட்டத்தில் தங்க மோதிரங்களை தயார் நிலையில் வைத்துள்ளோம். உசிலம்பட்டியில் மட்டும் 1,500 பேருக்கு தங்க மோதிரங்கள் வழங்கும் வாய்ப்புள்ளது” என்று அவர் கூறினார்.