புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளையை அடக்க முயன்ற வீரர்கள்.
புதுக்கோட்டை: தமிழகத்தில் நடப்பாண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகேயுள்ள தச்சங்குறிச்சியில் நேற்று நடைபெற்றது. இதில் காளைகள் முட்டியதில் 51 பேர் காயமடைந்தனர்.
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் எம்.அருணா தலைமை வகித்தார். அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தனர். இதில், புதுக்கோட்டை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட 497 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. காளைகளை அடக்க 200 வீரர்கள் களமிறங்கினர்.
ஜல்லிக்கட்டிப் போட்டியில் காளைகள் முட்டியதில் காளை உரிமையாளர்கள் 20 பேர், வீரர்கள் 15 பேர், பார்வையாளர்கள் 16 பேர் என மொத்தம் 51 பேர் காயமடைந்தனர். இவர்களில் 10 பேர் புதுக்கோட்டை, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
பிடிபடாத காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் காளைகளை அடக்கிய வீரர்களுக்குப் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. கந்தர்வக்கோட்டை போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.