சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது உண்மை என்றால் துரதிர்ஷ்டவசமானது என கருத்து தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமி நாராயணன், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட ஆட்சியர் மற்றும் தலைமைச் செயலரிடம் விளக்கம் கேட்டு அறிக்கை தாக்கல் செய்ய அரசு தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதிமுக பெண் வழக்கறிஞரான ஆர். த்ரிசூலி இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பாவது: கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு, கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தமிழக டிஜிபியிடம் அறிக்கை கோரியுள்ளது. சம்பந்தப்பட்ட எம்எல்ஏ மீது இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த ஆட்சியில் ஒரு பெண் மாவட்ட ஆட்சியருக்கு, ஆளுங்கட்சி எம்எல்ஏ ஒருவர் பாலியல் ரீதியாக குறுஞ்செய்தி அனுப்பியதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. எனவே சம்பந்தப்பட்ட தவெக எம்எல்ஏ அருள்விக்னேஷ் மீதான புகார் குறி்த்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தக்கோரி கடந்த நவ.11 அன்று தமிழக டிஜிபியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே, இந்த விவகாரத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டு, எந்தவொரு வெளிப்புற அழுத்தத்துக்கும் இடம் கொடுக்காமல் எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது குற்றவியல் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து நியாயமான, நேர்மையான விசாரணை நடத்த போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக பெண் மாவட்ட ஆட்சியரின் கண்ணியம் மற்றும் மரியாதையை கேள்விக்குள்ளாக்கும் வகையில் சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டு வருவது தொடர்பாகவும் விசாரணை நடத்த வேண்டும்.
சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் இதுதொடர்பாக புகார் அளிக்கவில்லை எனக்கூறி காத்திருக்காமல், பொதுவெளியில் வெளியான தகவல்களின் அடிப்படையில் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்ய தமிழக டிஜிபி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பிக்கு உத்தரவிட வேண்டும். மேலும் இதுதொடர்பான டிஜிட்டல் ஆதாரங்களை பத்திரப்படுத்தவும் போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும், என அதில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, செய்திதாள்களில் வெளிவந்த செய்தியின் அடிப்படயில் நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு எப்படி உத்தரவிட முடியும், ஆபாச குறுஞ்செய்தி தொடர்பாக மாவட்ட ஆட்சியர் எதுவும் புகார் அளித்துள்ளாரா, அதற்கான ஆதாரங்கள் உள்ளதா என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதற்கு காவல் துறை தரப்பில், இந்த விவகாரம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், தலைமைச் செயலர் உள்பட யாரிடமிருந்தும் எந்த புகாரும் வரவில்லை, என தெரிவிக்கப்பட்டது. அப்போது மனுதாரர் தரப்பி்ல், இதுதொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் டிஜிபியிடம் விளக்கம் கோரியுள்ளது. ஆளுங்கட்சி எம்எல்ஏ என்பதால் அனைத்து உயரதிகாரிகளும் அவரை பாதுகாப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.
அதற்கு நீதிபதி, “தேசிய மகளிர் ஆணையமும் ஊடகங்களில் வெளிவந்த செய்தியின் அடிப்படையில் தான் விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது உண்மை என்றால் அது துரதிர்ஷ்டவசமானது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட ஆட்சியர் மற்றும் தலைமைச் செயலரிடம் விளக்கம் கேட்டு, அரசு தரப்பு வழக்கறிஞர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை இன்று (நவ.24) தள்ளி வைத்துள்ளார்.