சிவகங்கை: சிவகங்கை அருகே ஒரு சிறுமி, 2 சிறுவர்களை மிரட்டி காயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்த கோயில் பூசாரிக்கு 178 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சிவகங்கை அருகே சோழபுரத்தைச் சேர்ந்த கோயில் பூசாரி பெரியசாமி (70). இவர் கடந்த 2024-ம் ஆண்டு கோயிலுக்கு வந்த 2 சிறுவர்கள் மற்றும் ஒரு சிறுமியை மிரட்டி, காயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுகுறித்து குழந்தைகள் நலக்குழுவினர் அளித்த புகாரின் பேரில் சிவகங்கை அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிந்து பெரியசாமியை கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல்முருகன் குற்றம் சாட்டப்பட்ட பெரியசாமி 3 குழந்தைகளை மிரட்டியது, காயம் ஏற்படுத்தியது, பாலியல் வன்கொடுமை செய்தது, பூசாரியாக இருந்து கொண்டு பாலியல் குற்றம் புரிந்தது ஆகிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன.
இந்த வழக்கில் 2 பேரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக தலா 30 ஆண்டுகள் சிறை, ரூ.2 ஆயிரம் அபராதம், மேலும் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக 20 ஆண்டு சிறை, ரூ.1000 அபராதம், கோயிலில் பூசாரியாக இருந்துகொண்டு 3 பேரை வன்கொடுமை செய்த குற்றத்துக்காக தலா 30 ஆண்டுகள் வீதம் 90 ஆண்டுகளும், ரூ.3,000 அபராதமும் மேலும் சில பிரிவுகளில் சிறைத் தண்டனை என மொத்தம் 178 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
மேலும் ஒவ்வொரு குற்றத்துக்கும் கொடுக்கப்பட்ட தண்டனையை தனித்தனியாக அனுபவிக்க உத்தரவிட்டார். இதனால் பெரியசாமி 178 ஆண்டுகள் சிறைத் தண்டனையை மொத்தமாக அனுபவிக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி, 2 சிறுவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்க அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.